முதலீடுகளை ஈர்க்க ஜப்பான், சிங்கப்பூருக்கு புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலீட்டாளர்களை சந்தித்து உலக முதலீட்டாளர் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்க உள்ளதாகவும், புதிய முதலீடுகளை ஈர்க்க ஜப்பான், சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதல்வருக்கு வாழ்த்து
புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பாகவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இன்று பயணம் மேற்கொள்கிறார்.
முன்னதாக சென்னை விமான நிலையத்தில் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் முதல்வரை சந்தித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், ‘’வருகின்ற ஜனவரி மாதம் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. அந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முதலீட்டார்களுக்கும் அழைப்பு விடுத்து வருகிறோம்.
முதலீட்டாளர்களை ஈர்க்க திட்டம்
அந்த அடிப்படையில் 9 நாள் பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளுக்கு இந்த பயணத்தை நான் மேற்கொள்ளவுள்ளேன். என்னுடன் தொழில்துறை அமைச்சரும், அரசுத்துறை உயர் அதிகாரிகளும் வருகின்றனர்.
கடந்த மார்ச் மாதம் அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் ஐக்கிய அரபு நாடுகளுக்கு சென்று பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. இதன் தொடர்ச்சியாகத்தான் ஜப்பான் மற்றும் சிங்கப்பூருக்கு இந்த பயணத்தை மேற்கொண்டிருக்கிறேன்.
நான் செல்லும் இடங்களில் முதலீட்டாளர்களைச் சந்தித்து பேச இருக்கிறேன். புதிய தொழில் நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. இந்த பயணத்தின் முக்கிய நோக்கம் 2024 -ம் ஆண்டு நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர் மாநாட்டிற்கு அழைப்பு விடுப்பது தான்’’ என்றார்.