பிரதமரின் சர்ச்சை பேச்சு: மோடிக்கு தோல்வி பயம் வந்துவிட்டது - மு.க.ஸ்டாலின் ஆவேசம்!
பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிரதமரின் சர்ச்சை பேச்சு
ராஜஸ்தானில் நடைபெற்ற பாஜக பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது முஸ்லிம்கள் குறித்து பிரதமர் மோடி தெரிவித்த கருத்துகள் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. அதாவது, இந்தியாவின் சொத்துகளை முஸ்லிம்களுக்கே சொந்தம் என்று காங்கிரஸ் கூறியதாகவும்,
எனவே காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துவிட்டால் ஒருதரப்பு மக்களுக்கு கொடுப்பதற்காக, பலரது சொத்துகளை எடுத்துக் கொள்வார்கள் எனவும் பேசியிருந்தார். இந்நிலையில் பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் "பிரதமர் நரேந்திர மோடியின் நச்சு பேச்சு மிகவும் மோசமானது.
மு.க.ஸ்டாலின் கண்டனம்
தனது ஆட்சியின் தோல்விகளால் நாட்டு மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர் என்பதை மோடி உணர்ந்துள்ளார். அதனால் பயந்து போன மோடி, வேறு வழியில்லாமல் இப்போது மத உணர்வுகளைத் தூண்டிவிட்டுள்ளார்.
தேர்தலில் எப்படியும் தோற்றுவிடுவோம் என்கிற தோல்வி பயத்தால், மோடி வெறுப்புப் பேச்சுக்களை பேசி வருகிறார். பாஜக தேர்தல் அறிக்கையை மோடியின் கியாரண்டி என பாஜகவினர் கூறுகிறார்கள். ஆனால், வெறுப்பும் பாகுபாடும்தான் மோடியின் நிஜமான கியாரண்டி.
பிரதமர் மோடியின் இந்த அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு எந்தவொரு நடவடிக்கை எடுக்காமல்.. காது கேட்காததை போலத் தேர்தல் ஆணையம் இருந்து வருகிறது. தேர்தல் ஆணையம் தனது பிரத்யேகமான நடுநிலைமையை கைவிட்டுவிட்டதையே இது காட்டுகிறது" என்று தெரிவித்துள்ளார்.