போலீஸ் அதிகாரியின் நேர்மையை பார்த்து எம்ஜிஆர் என்ன செய்தார்ன்னு தெரியுமா...? இதோ வெளியான தகவல்...!
மக்கள் திலகம் எம்ஜிஆர்
மக்களின் மனதில் அன்றைக்கும் இன்றைக்கும் நீங்காத இடம்பெற்றவர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர். தமிழ் சினிமா உலகில் மன்னாதி மன்னனாக திகழ்ந்தவர். தமிழ்நாட்டின் முதல்வராக 10 ஆண்டுகள் பதவி வகித்த அவர், மக்கள் திலகமாக உயர்ந்து நின்றார். குழந்தைகள் மீது அதிக பிரியம் கொண்ட எம்ஜிஆரின் படங்களுக்கு ரசிகர்களும் ஏராளம். நல்ல கருத்துக்களை, தன் படங்களில் அவர் சொல்லத் தவறியதே கிடையாது. உதவும் கரம் என்றால் முதலில் நமக்கு ஞாபகம் வருபவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் தான். இவர் செய்த உதவிகள் ஒன்றா, இரண்டா... அந்த அளவிற்கு கொடை வள்ளலாக வாழ்ந்தவர் எம்ஜிஆர்
அதிகாரியின் நேர்மையை காண்டு வியந்துபோன எம்.ஜி.ஆர்
ஒருநாள் எம்.ஜி.ஆர் செங்கல்பட்டில் படப்பிடிப்பு முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது சாலையில் ஒரு காவல்துறை அதிகாரி வீட்டுக்கு செல்வதற்கு பேருந்துக்காக நின்றுக்கொண்டிருந்தார்.
அந்த வழியாக வந்த எம்.ஜி.ஆர் அவரைப் பார்த்தார். சாலையில், அந்த காவல்துறை அதிகாரி நிற்பதை பார்த்தவுடன் எம்.ஜி.ஆர் தன் காரை நிறுத்த கூறினார். காவல் துறை அதிகாரி அருகில் கார் நின்றதும், கார் கதவை திறந்து எங்க போகணும்? என்று கேட்டு, ஏறுங்க நான் உங்களை விட்டுச் செல்கிறேன் என்று கூறியுள்ளார்.
ஆனால், அந்த காவல் துறை அதிகாரியோ, இல்லை ஐயா... நான் பேருந்திலேயே செல்கிறேன் என்றார். இந்த நேரத்தில் இங்கு பேருந்து வராது என்று கூறி அவரை கட்டாயப்படுத்த அவரும் காரில் ஏறிக் கொண்டார். பின்னர் ‘சாப்பிட்டிங்களா?’ என்று கேட்டு சாப்பிட பழங்களை எடுத்து கொடுத்துள்ளார் எம்ஜிஆர்.
அதற்கு அந்த போலீஸ் அதிகாரி, ஒசியில் பயணம் செய்வதே எனக்கு பிடிக்கவில்லை. இதற்கு மேல் என்னை வற்புறுத்த வேண்டாம் என்று கூறியுள்ளார். பின்னர், சிறிது நேரத்தில் காவல்துறை அதிகாரியின் வீடு வருவதற்கு முன், காரை நிறுத்த கூறினாராம்.
இன்னும் உங்கள் வீடு வரவில்லையே என்று எம்ஜிஆர் கூற, இல்லை சார்.. நான் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவன். இன்று திடீரென காரில் சென்று இறங்கினால் என்னை தவறாக நினைப்பார்கள். அதனால் இங்கேயே இறங்கிக்கொள்கிறேன் என்று கூறினாராம்.
இவரது நேர்மையும், பிறரிடம் எந்த உதவியும் பெறக்கூடாது என்ற எண்ணமும் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்து விட்டது.
மறுநாள் எம்.ஜி.ஆர் அந்த அதிகாரியை பற்றி விசாரிக்க கூறியுள்ளார். அப்போது, அவர் உண்மையானவர், நேர்மையானவர் என்றும், அவருக்கு மூன்று பெண்கள். அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க போதிய வசதி இல்லாமல் தவிக்கிறார் என்ற செய்தியை அறிந்த எம்ஜிஆர் மறுநாள் காலையில் அந்த போலிஸ் அதிகாரியை தன் தோட்டத்திற்கு வரவழைத்துள்ளார்.
அப்போது எம்ஜிஆர் அந்த காவல்துறை அதிகாரியிடம், உங்கள் நேர்மை எனக்கு பிடித்துவிட்டது. உங்களை பற்றி நான் அறிந்தேன். என்னை உங்கள் சகோதரனாக நினைத்து கொள்ளுங்கள் என்று கூறி, அவருடைய 3 பெண்களுக்கு எம்.ஜி.ஆரே திருமணம் செய்து வைத்து மணமக்களை நேரில் சென்று வாழ்த்தியுள்ளார்.