காதல் கவிதைகள் படித்துடும் நேரம் : கவிஞர் பிறைசூடன் காலமானார்
கவிஞரும், பாடலாசிரியருமான பிறைசூடன் (65) உடலநலக்குறைவால் காலமானார். 1956 பிப்ரவரி 6 அன்று திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் பிறந்தவர் பிறைசூடன். 1985-ல் வெளியான ‘சிறை’ படத்தில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த ’ராசாத்தி ரோசாப் பூவே’ என்னும் பாடலை எழுதியதன் மூலம் தமிழ்த் திரைப்படத் துறையில் பாடலாசிரியராக முதல் தடம் பதித்தார்.
தொடர்ந்து 80களில் இசைக்கொடி நாட்டி ஆண்டுகொண்டிருந்த இளையராஜா இசையில் ’என்னைப் பெத்த ராசா’ படத்தில் ’சொந்தம் ஒன்றாய்’ என்ற பாடலை எழுதினார். ’ராஜாதி ராஜா’ படத்தில் புகழ்பெற்ற காதல் பாடலான ‘மீனம்மா மீனம்மா’ பிறைசூடன் எழுதியதுதான்.
இதற்கடுத்த ஆண்டில் ‘பணக்காரன்’ படத்துக்காக பிறைசூடன் எழுதிய ‘நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான்’ என்னும் திருமண வாழ்த்துப் பாடல் இன்றுவரை திருமண வரவேற்பு மேடைக் கச்சேரிகளில் தவறாமல் இடம்பிடிக்கும் பாடலாகத் திகழ்கிறது.
பின்னர், அதே ஆண்டில் இயக்குநர் வசந்தின் அறிமுகப்படமான ‘கேளடி கண்மணி’யில் பிறைசூடன் எழுதிய ‘தென்றல் தான் திங்கள்தான் நாளும் சிந்தும்’ என்னும் பாடல் அதன் இளமைத் துள்ளலான இசையமைப்புக்காக மட்டுமல்லாமல் பாடல்வரிகளுக்காகவும் ரசிக்கவைத்தது.
1991இல் ’என் ராசாவின் மனசிலே’ படத்தில் ‘சோலப் பசுங்கிளியே’ பாடலுக்காக சிறந்த பாடலாசிரியருக்கான தமிழக அரசின் விருதை வென்றார் பிறைசூடன்’. பிரம்மாண்ட வெற்றிபெற்ற ‘கேப்டன் பிரபாகரன்’ படத்தின் அடையாளங்களில் ஒன்றாகிப் போன ஆட்டமா தேரோட்டமா பாடலும் அவர் எழுதியதே.
அதே ஆண்டில் இதயம் - படத்தில் இதயமே இதயமே பாடலில் இசையுடன் சேர்ந்து பிறைசூடனின் வரிகளும் காதல் தோல்வியின் தீரா வலியை கேட்பவர் அனைவரையும் உணர வைத்தது. கலகலக்கும் மணியோசை (ஈரமான ரோஜாவே), காதல் கவிதைகள் படித்துடும் நேரம்’ (கோபுர வாசலிலே) என அந்த ஆண்டில் பிறைசூடன் எழுதிய காலத்தால் அழிக்க முடியாத பாடல்.
என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி’ பிறைசூடன் எழுதிய மற்றுமொரு புகழ்பெற்ற வெற்றிப் பாடல் ஆகும்
தமிழ் திரையிசை உலகின் சகாப்தங்களான எம்.எஸ்.வி. இளையராஜா, ரகுமான் ஆகிய மூவரின் இசையிலும் பாடல்களை எழுதிய அரிதான பெருமையைப் பெற்றவர்களில் ஒருவர் பிறைசூடன். புத்தாயிரத்திலும் மூத்த இசையமைப்பாளர்கள், இளம் இசையமைப்பாளர்களுடனும் தொடர்ந்து பணியாற்றிவந்தார்
பிறைசூடன். 2010இல் ‘நீயும் நானும்’ படத்துக்காக ஸ்ரீராம் விஜய் இசையில் எழுதிய பாடலுக்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தமிழக அரசின் விருதை மூன்றாம் முறையாக வென்றார்.
இந்த நிலையில் உடல்நலக்குறைவினால் பாதிக்கப்பட்ட கவிஞரும், பாடலாசிரியருமான பிறைசூடன் (65) உடலநலக்குறைவால் காலமானார்.