‘இந்தியன் 2’ படத்திற்காக லைகா தொடர்ந்த வழக்கு - ஷங்கருக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு
'இந்தியன் 2' படத்தை முழுமையாக முடித்து கொடுக்காமல் இயக்குனர் ஷங்கர் பிற படங்களை இயக்கக்கூடாது என iலைகா தொடர்ந்த வழக்கில் இடைக்காலத் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது. நடிகர் கமல் நடிப்பில் உருவாகி வரும் ‘இந்தியன் 2’. இந்த திரைப்படத்தை இயக்குநர் ஷங்கர் இயக்கி வருகிறார்.
லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை லைகா நிறுவனம் தாக்கல் செய்திருந்தது. அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, "‘இந்தியன் 2’ படத்தை முடித்து கொடுக்காமல் வேறு நிறுவன படங்களை இயக்குவதற்கு இயக்குனர் ஷங்கருக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், “படத்திற்கு 150 கோடி ரூபாய் பட்ஜெட் போடப்பட்டிருந்தது.
ஆனால், அதை தாண்டி 236 கோடி ரூபாய் வரை செலவு ஆகியுள்ளது. இருப்பினும் 80 சதவீத பணிகள் மட்டுமே முடிந்துள்ளது. ஆகையால் அவர் மீதமுள்ள படத்தின் பணிகளை முடித்து கொடுக்க வேண்டும். இயக்குனர் ஷங்கருக்கு 40 கோடி ரூபாய் சம்பளம் பேசியிருக்கிறோம். தற்போது 14 கோடி ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது.
மீதமுள்ள 26 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் வைப்புத் தொகையாக செலுத்தவும் தயாராக இருக்கிறோம்” என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணை, நீதிபதி பி.டி.ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதி, “இயக்குனர் ஷங்கரின் விளக்கத்தை கேட்காமல் எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது. ஆகையால் ஷங்கர் பிற நிறுவன படங்களை இயக்கக் கூடாது என்ற தடையை விதிக்க இயலாது.
இந்த வழக்கு குறித்து இயக்குனர் ஷங்கர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 15ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைப்பதாக நீதிபதிகள் கூறினர்.