சென்னை அணியை காப்பியடித்த லக்னோ அணி - ஐபிஎல் தொடரில் கிளம்பும் புது சர்ச்சை
ஐபிஎல் 15வது சீசனில் களமிறங்கும் புதிய அணியான லக்னோ தங்களது பெயரை அறிவித்துள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந்தியாவில் பிசிசிஐயால் நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் தொடரில் நடப்பாண்டு புதிதாக இரண்டு அணிகள் இணைவதோடு வீரர்களுக்கான மெகா ஏலமும் நடக்கவுள்ளது. இதனால் இந்த தொடர் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதனிடையே புதிதாக கலந்து கொண்ட லக்னோ அணி தங்களுக்கு புது பெயர் ஒன்றை பரிந்துரைக்குமாறு ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டது. இதில் பல ரசிகர்கள் லக்னோ நவாப்ஸ் என்ற பெயரை தேர்வு செய்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில் லக்னோ அணி சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு சவால் விடும் வகையில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் என்ற பெயரை சூட்டியுள்ளது.
இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள சஞ்சிவ் கோயங்கா, ரசிகர்கள் தான் இந்த பெயரை சூட்டினார்கள் என்றும், அணிக்கு வழக்கம் போல் ஆதரவு அளித்து ஆசிர்வதியுங்கள் என்று கூறினார். ஏற்கனவே கோயங்கா புனே அணியை வாங்கிய போது அந்த அணிக்கு ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் என்ற பெயரை சூட்டியிருந்தார். தற்போது அதே பெயரை லக்னோ அணிக்கும் வைத்துள்ளார்.
லக்னோ அணியின் பயிற்சியாளராக ஆன்டி பிளஃவரும், மெண்டராக கவுதம் கம்பீரும் நியமிக்கப்பட்டுள்ளனர். லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார் அவருக்கு 17 கோடி ரூபாய் ஊதியமாக வழங்கப்பட உள்ளது. இதையடுத்து லக்னோ அணியை 7090 கோடி ரூபாய் கொடுத்து கோயங்கா வாங்கியுள்ளார்.
கோயங்காவின் சகோதரரான ஹர்ஷ் கோயங்காவுக்கு தோனி என்றாலே பிடிக்காது. இதனால் சிஎஸ்கேவை குறிவைக்கும் விதமாகவே இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளதாக ரசிகர்கள் விமர்சித்துள்ளனர்.