ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறும் மும்பை அணி - 6வது முறையாக தோற்றதால் ரசிகர்கள் அதிர்ச்சி
ஐபிஎல் போட்டியில் லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி தோற்றதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மகாராஷ்ட்ராவில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 26 வது லீக் ஆட்டத்தில் மும்பை - லக்னோ அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய லக்னோ அணியில் கேப்டன் கே.எல்.ராகுலில் அதிரடி சதத்தால் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு அந்த அணி 199 ரன்கள் குவித்தது.
இதனை தொடர்ந்து 200 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் மும்பை அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதிகப்பட்சமாக சூர்யகுமார் யாதவ் 37, திலக் வர்மா 26, கீரன் பொல்லார்ட் 25 ரன்கள் விளாச மற்ற வீரர்கள் ரன் எடுக்க தவறினர்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் மட்டுமே எடுத்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன்மூலம் மும்பை அணி இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் தோல்வியடைந்து மோசமான நிலையில் உள்ளது. எஞ்சியுள்ள 8 போட்டிகளில் வென்றாலும் ரன்ரேட் வித்தியாசத்தில் அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைவது கஷ்டம் தான் என்பதால் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து மும்பை அணி முதல் அணியாக வெளியேறுவது உறுதியாகியுள்ளது.