எவ்வளவு நேரம் மனைவி முகத்தை பார்ப்பீங்க; ஞாயிற்றுகிழமையும் வேலைக்கு வாங்க - L&T தலைவர் பேச்சால் சர்ச்சை
ஞாயிற்றுகிழமையும் வேலை பார்க்க வேண்டும் என L&T தலைவர் பேசியதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
வேலை நேரம்
பெரும்பாலான நிறுவனங்களில் ஒரு நாளைக்கு 8 மணி நேரம் வேலை நேரம் இருக்கும். வாரம் ஒரு நாள் அல்லது இரு நாள் விடுமுறை இருக்கும். கூடுதல் நேரம் வேலை பார்ப்பவர்களுக்கு OT(Over Time Pay) வழங்கப்படும்.
சமீபத்தில் இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி, இளைஞர்கள் வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும். நாள் ஒன்றிற்கு 12 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும் என பேசி இருந்தார்.
L&T தலைவர்
Work Life balance தொடர்பான விவாதங்கள் அதிகரித்து வரும் நிலையில் நாராயண மூர்த்தி பேச்சுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் லார்சன் & டூப்ரோ ( L&T ) என்ற பிரபல பன்னாட்டு நிறுவனத்தின் தலைவர் எஸ்.என். சுப்பிரமணியன் 90 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும் என பேசியது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தனது நிறுவன ஊழியர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக பேசிய அவர், "உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், என்னால் ஞாயிற்றுக்கிழமைகளில் உங்களை வேலை செய்ய வைக்க முடியவில்லை என்று வருத்தமாக உள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் அவர்களை வேலை செய்ய வைத்தால், நான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பேன்.
ஞாயிற்றுக்கிழமை வேலை
ஏனென்றால், நான் ஞாயிற்றுக்கிழமைகளில் வேலை செய்கிறேன்.நீங்கள் வீட்டில் உட்கார்ந்து என்ன செய்கிறீர்கள்? எவ்வளவு நேரம் உங்கள் மனைவி முகத்தை உற்றுப் பார்க்க முடியும்? மனைவிகள் எவ்வளவு நேரம் கணவனைப் பார்த்துக் கொண்டிருக்க முடியும்? அலுவலகத்திற்குச் சென்று வேலையைத் தொடங்குங்கள்.
சீனர்கள் வாரத்திற்கு 90 மணிநேரம் வேலை செய்கிறார்கள். அமெரிக்கர்கள் வாரத்திற்கு 50 மணிநேரம் மட்டுமே வேலை செய்கிறார்கள். இதனால் சீனாவால் அமெரிக்காவை வெல்ல முடியும் என என் சீன நண்பர் கூறினார். நீங்கள் உலகின் உச்சத்தில் இருக்க வேண்டும் என்றால், வாரத்திற்கு 90 மணி நேரம் உழைக்க வேண்டும்" என பேசினார்.
எதிர்ப்பு
இவரின் பேச்சுக்கும் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். "மிகப்பெரிய பொறுப்புகளில் உள்ள நபர்கள் இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடுவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. Mental Health Matters." என பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே கண்டனம் தெரிவித்துள்ளார்.
வாரத்தில் 90 மணி நேரம் தொழிலாளர்கள் வேலை செய்ய வேண்டுமென
— Su Venkatesan MP (@SuVe4Madurai) January 10, 2025
எல் & டி தலைவர் எஸ்.என்.சுப்பிரமணியம் பேசியுள்ளார்.
தொழிலாளர்கள் 40 மணி நேரம் வேலை செய்தே சுப்பிரமணியத்தின் வருட சம்பளம் 51 கோடி. முந்தைய வருடத்தை விட 43 சதவிகித உயர்வு.
தான் மேலும் லாபமடைய தொழிலாளர்கள் 90 மணி நேரம்… pic.twitter.com/9MlTC0vCnC
"நீங்கள் செல்வம் பெருக்க தொழிலாளர்களின் இணையர்களின் முகங்களை கொச்சைப்படுத்தும் துணிவை உங்களுக்கு லாபவெறி கொடுத்துள்ளது" என மதுரை எம்பி சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார்.