த்ரில் வெற்றி பெற்ற லக்னோ அணி... ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறிய கொல்கத்தா
லக்னோ அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் கொல்கத்தா அணி நூழிலையில் தோல்வியை தழுவியதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தது.
நவிமும்பை டி.ஒய் பாட்டில் மைதானத்தில் இன்று நடைபெற்ற 66வது போட்டியில் லக்னோ - கொல்கத்தா அணிகள் மோதின. இப்போட்டி கொல்கத்தா அணிக்கு பிளே ஆஃப் சுற்றை உறுதி செய்யும் போட்டி என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய கே.எல்.ராகுல் - குயின்டன் டிகாக் ஜோடி எதிரணியின் பந்துவீச்சை துவம்சம் செய்ய தொடங்கினர்.
சிக்ஸ், பவுண்டரி என பறந்த லக்னோவின் பேட்டிங்கை பார்த்து கொல்கத்தா அணி வீரர்கள் வி்ழி பிதுங்கினர். டிம் சௌதி வீசிய 19வது ஓவரில் ராகுல் - டி காக் ஜோடி 4 சிக்ஸர்களையும், ரஸல் வீசிய 20வது ஓவரில் டி காக் 4 பவுண்டரிகளையும் விளாசியதால் 20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி விக்கெட் இழப்பின்றி 210 ரன்கள் குவித்தது.
குயின்டன் டிகாக் 70 பந்துகளில் 140 ரன்களும், கே.எல்.ராகுல் 51 பந்துகளில் 68 ரன்களும் அடித்தனர். இதனைத் தொடர்ந்து 211 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் கண்ட கொல்கத்தா அணி சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்தாலும் லக்னோ அணியினருக்கு பயம் காட்டினர்.
அந்த அணியில் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 50, நிதிஷ் ரானா 42, ரிங்கு சிங் 40 ரன்களும் விளாச 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 8 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 2 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி த்ரில் வெற்றி பெற்றது.
இதன்மூலம் லக்னோ அணி பிளே ஆஃப் சுற்றை உறுதி செய்துள்ளது. அதேசமயம் கொல்கத்தா அணி நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது.