கே.எல்.ராகுலுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு போல.. தொடரும் லக்னோ அணியின் வெற்றி
டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் லக்னோ அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
நவி மும்பையில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி களம் கண்ட டெல்லி அணியில் தொடக்க வீரர் ப்ரித்வி ஷா 61 ரன்கள் விளாசினார். தொடர்ந்து கேப்டன் ரிஷப் பண்ட் 39, சர்ப்ராஸ் கான் 36 ரன்கள் எடுக்க டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி டெல்லிக்கு பதிலடி கொடுத்தது. தொடக்க வீரர் குயின்டன் டிகா 80 ரன்கள் குவிக்க, கேப்டன் கே.எல்.ராகுல் தன் பங்குக்கு 24 ரன்கள் எடுத்தார். இதனால் லக்னோவின் வெற்றி எளிதானது. அந்த அணி 19.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதன்மூலம் அந்த அணி புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த சீசனில் அதிர்ஷ்டமில்லாத பஞ்சாப் அணியின் கேப்டனாக கிண்டல் செய்யப்பட்ட கே.எல் ராகுல் இந்த சீசனில் லக்னோ அணியின் வெற்றிகரமான கேப்டனாக வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.