மகளின் காதலன் குடும்பத்தினர் மீது துப்பாக்கி சூடு நடத்திய தந்தை - 4 பேர் உயிரிழப்பு!
பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டம் சோட்டா பல்லத்வால் கிராமத்தை சேர்ந்தவர் ஹர்மன் சிங். இவர் சுக்ஜீந்தர் சிங் என்பவரின் மகளை காதலித்து வந்தார். இது குறித்து சுக்ஜீந்தர் சிங் ஏற்கனவே ஹர்மன் சிங்கை எச்சரித்து உள்ளார். இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன் ஹர்மன் சிங், சுக்ஜீந்தர் சிங்கின் மகளை காதல் திருமணம் செய்து கொண்டார்.
இதனால் கோபமடைந்த சுக்ஜீந்தர் சிங் மற்றும் அவரது சகோதரர் நேற்று காலை 6:30 மணியளவில் ஹர்மன் சிங்கின் வயலுக்கு சென்று உள்ளார். அங்கு ஹர்மன் சிங் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் வயல் வெளியில் வேலை செய்து கொண்டு இருந்தனர். அவர்களை நோக்கி சுக்ஜீந்தர் சிங் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு உள்ளார்.
இதில் ஹர்மனின் தாத்தா மங்கல் சிங் (65), தந்தை சுக்விந்தர் சிங் (42), மாமா ஜஸ்பீர் சிங் (40) மற்றும் உறவினர் பாபன்தீப் சிங் (18) என 4 பேர் உயிரிழந்தனர். ஹர்மன் சிங் (20), மற்றும் அவரது உறவினர் ஜஷன்பிரீத் ஆகியோர் காயமடைந்தனர்.
ஹர்மன் சிங்கின் குடும்பத்தினரைத் துப்பாக்கியால் சுட்ட பின் சுக்ஜிந்தர் சிங் தனது மோட்டார் சைக்கிளில் தலைமறைவாகி விட்டார்.
இது குறித்து போலீசார் கூறும் போது குற்றவாளியை தேடி வருகிறோம். 302 (கொலை), 304 (அலட்சியம் காரணமாக மரணத்தை ஏற்படுத்துவது), ஐபிசியின் 506 (குற்றவியல் மிரட்டல்) மற்றும் ஆயுதச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளோம் என கூறி உள்ளனர்.