திருமணத்திற்கு வற்புறுத்திய காதலி - உயிரோடு எரித்துக் கொன்று காதலன் வெறிச்செயல்!
திருப்பூரில் திருமணம் செய்ய கோரியதற்காக இளம்பெண் தன் காதலனால் தீ வைத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
காதல் விவகாரம்
திருப்பூர் மாவட்டம் பெத்தாம்பாளையம் அருகே பூஜா என்ற 19 வயது இளம்பெண் தான் வேலை பார்த்த பனியன் நிறுவனத்தில் லோகேஷ் என்பவரை காதலித்து வந்துள்ளார். இதையடுத்து பூஜா தனது காதலன் லோகேஷிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த லோகேஷ் பூஜாவை காட்டுப்பகுதியில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தியுள்ளார். இதை கண்ட அப்பகுதி மக்கள் பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தீ வைத்த கொடூரம்
இதற்கிடையில் அந்த பெண்ணுக்கு தீ வைத்து விட்டு தப்பி செல்ல முயன்ற லோகேஷ் கீழே விழுந்து காயம் அடந்ததால், அவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்ததில் பூஜா ராயர்பாளையத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.
மேலும் இது குறித்து அவர் அளித்த வாக்குமூலத்தில், அவர் தன் காதலனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதாகவும், இதனால் ஆத்திரத்தில் தன்னை சரமாரியாக தாக்கி பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பூஜா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடயே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.