அலங்காநல்லூர் வாடிவாசலில் திருமணம்: காதலர்கள் கோரிக்கை மனு
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வாடிவாசலில் திருமணம் செய்து கொள்ள அனுமதிக்க கோரி ஆட்சியர் அலுவலகத்தில் காதலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை அலங்காநல்லூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன், எழுத்தாளரான இவருக்கும், வித்தியாதரணி என்ற இயற்கை ஆர்வலருக்கும் காதல் மலர்ந்தது.
இதனையடுத்து இருவரும் தமிழ் மரபு வழியில் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். இந்நிலையில் கொரோனா காலம் என்பதால், மிக எளியமுறையில் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து 16ம் தேதி நடைபெறும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதான வாடிவாசலில் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டனர்.
இதன்படி அன்றைய தினம் இரு வீட்டாா் மட்டும் பங்கேற்கும் திருமண உறுதியேற்பு நடத்த முடிவெடுத்து, இதற்கான அனுமதி கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். இது தொடா்பாக காா்த்திக்கேயன் கூறுகையில், ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற்றபோது, கடந்த 2017 ஜனவரி மாதம் வாடிவாசலில் நானும், வித்தியாதரணியும் சந்தித்தோம்.
எங்கள் காதல் மலர்ந்த அந்த இடத்திலேயே, இருவீட்டாா் சம்மதத்துடன் சந்தித்த இடத்திலேயே திருமண உறுதியேற்பையும் நடத்தவேண்டும் என்ற எண்ணத்தில் மனு அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.