விரும்பிய பெண் காதலை ஏற்க மறுப்பு பெண்ணின் வீட்டை நோக்கி துப்பாக்கியால் சுட்ட இளைஞரால் பரபரப்பு!
ஆந்திரா மாநிலம் சித்துாரில் இளம் பெண் காதலிக்க மறுத்ததால் இளைஞர் ஒருவர் பெண் வீட்டை நோக்கி துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சித்தூர் மாவட்டத்தில் உள்ள கடப்பா நத்தம். கிராமத்தை சேர்ந்தவர் சந்த்பாஷா இவர் தன்னுடைய வீட்டின் அருகே வசித்து வரும் இளம் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். தன்னுடைய காதலை அவர் பலமுறை எடுத்துக் கூறியும் அந்த பெண் ஏற்கவில்லை. மேலும் இது தொடர்பாக அந்த பெண் தன்னுடைய தாயிடம் கூறவே அவர் சந்த்பாஷாவை அழைத்து எச்சரித்து அனுப்பி வைத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த சந்த்பாஷா இன்று அதிகாலை திடீரென்று தன்னிடம் இருந்த நாட்டு துப்பாக்கியுடன் வீட்டிலிருந்து வெளியே வந்து சத்தம் போட்டு கொண்டிருந்தார்.இதனை பார்த்த அந்த இளம் பெண்ணின் குடும்பத்தார் அச்சம் அடைந்தனர். இந்தநிலையில் அந்த இளம்பெண்ணின் வீட்டின் கதவு மீது அவர் நாட்டு துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பெண்ணின் தாய் தொலைபேசி மூலம் போலீசாருக்கு தகவல் அளித்தார்.
தகவலின் பேரில் நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சந்த்பாஷாவை கைது செய்து நாட்டு துப்பாக்கியை கைபற்றிய வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.