காதலிக்க மறுத்த சிறுமி உயிருடன் தீ வைத்து எரிப்பு
தமிழகத்தில் காதலிக்க மறுத்ததால் சிறுமி உயிருடன் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடியின் எட்டயபுரம் அருகே இளம்புவனம் கிராமத்தை சேர்ந்தவர் அய்யனார், இவரது மனைவி காளியம்மாள். இருவரும் பிரிந்து வாழ்கின்றனர், இவர்களது மகள் மதுமிதா, பிளஸ் 2 படித்துமுடித்து விட்டு வீட்டில் இருக்கிறார்.
இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்பவர், தன்னை காதலிக்குமாறு அடிக்கடி மதுமிதாவுக்கு தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது.
இதனை தெரிந்து கொண்ட காளியம்மாள் பொலிசில் புகார் அளித்துள்ளார், தொடர்ந்து சந்தோஷை பொலிசார் எச்சரித்து அனுப்பியுள்ளனர்.
இதற்கிடையே மதுமிதாவை, தன் தாயாரின் ஊரான கீழநம்பிபுரத்துக்கு அனுப்பியுள்ளார் காளியம்மாள்.
கடந்த 23ம் திகதி மாலை தன் நண்பருடன் சென்ற சந்தோஷ், மதுமிதாவுக்கு மீண்டும் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.
மதுமிதா காதலிக்க மறுக்கவே, கொண்டு வந்த மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்ததுடன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் மதுமிதா அனுமதிக்கப்பட்டார், அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சந்தோஷ் மற்றும் அவரது நண்பர் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையே சிகிச்சை பலனின்றி மதுமிதா நேற்று காலை உயிரிழந்தார். இதனை தொடர்ந்து கொலை வழக்காக மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.