பேஸ்புக் மூலம் தோன்றிய காதல் - திருமணத்தில் முடிந்த நிலையில் கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி
சேலத்தில் பேஸ்புக் மூலம் தோன்றிய காதல் திருமணத்தில் முடிந்த நிலையில் தற்போது புதிய சிக்கல் எழுந்துள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவருக்கும், இலங்கையைச் சேர்ந்த நிஷாந்தினி என்ற பெண்ணுக்கும் பேஸ்புக் மூலம் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இருவரும் நட்பாக பழகி வந்த நிலையில் நாட்கள் செல்ல செல்ல காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது.
சுமார் 5 ஆண்டுகளாக காதலித்து வந்த இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவெடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் நிஷாந்தினி டூரிஸ்ட் விசா மூலம் இலங்கையிலிருந்து சேலம் வந்தடைந்தார்.
இதனையடுத்து ஓமலூர் அருகேயுள்ள பஞ்சுகாளிப்பட்டியில் அமைந்துள்ள கோவில் ஒன்றில் வைத்து உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ சரவணன் - நிஷாந்தினி இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது. தொடர்ந்து திருமணத்தை பதிவு செய்ய அரசு அலுவலகத்தை நாடிய போது சட்ட சிக்கல் எழுந்துள்ளது.
தடையில்லா சான்று கேட்டு அதிகாரிகள் திருப்பி அனுப்ப புது திருமண ஜோடிகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அளித்துள்ளனர். அதில் விசா காலம் முடிய உள்ளதால் காதல் கணவருடன் சேர்ந்து வாழ முடியாமல் நிலை ஏற்பட்டுள்ளது. தங்களை பிரித்து விட வேண்டாம் என்றும், தனக்கு இந்திய குடியுரிமை வழங்க வழிகளை செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.