தன்னை காதலித்த பெண்ணுக்கு சாபமளித்த விநாயகர் .. இது விநாயகர் காதல் கதை!
இந்துக்களின் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொது இடங்களில் பல வண்ணங்கள் மற்றும் பல வடிவங்களிலும், வீடுகளில் களிமண்ணில் வடிவமைக்கப்பட்ட சிலைகளையும் வைத்து பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர்.
விநாயகர் சதுர்த்தி
ஆண்டுதோறும் தமிழ் மாதமான ஆவணி மாதத்தின் வளர்ப்பிறை சதுர்த்தி தினத்தில், விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் களையிழந்த நிலையில் இந்த ஆண்டு, வளர்ப்பிறை சதுர்த்தி தினமான இன்று, உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. பொது இடங்களில் பல்வேறு வடிவங்கள் மற்றும் வண்ணங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இதேபோல, வீடுகளிலும் பல வடிவங்களில் களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
எப்போதும் சிங்கிளாகவே உள்ள விநாயகரைத்தான் நமக்கு தெரியும் ,அதே சமயம் விநாயகரை விரும்பிய துளசியின் காதல்கதை பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை. அதைப்பற்றி பார்க்கலாம்.
விநாயகரை காதலித்த துளசி
துளசி மரணத்தின் கடவுளான எமதர்மனின் மகள் ஆவார். அவர் தன் இளம் வயதில் விஷ்ணுவின் தீவிர பக்தையாக இருந்தார். அவர் தினமும் கங்கை நதிக்கரையில் உள்ள விஷ்ணுவின் கோவிலுக்கு சென்று நதியில் நீராடிவிட்டு விஷ்ணுவை வழிபடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
இவ்வாறு தினமும் செய்துகொண்டிருந்த போது ஒரு நாள் கங்கையின் மறுகரையில் ஒருவர் தியானத்தில் அமர்ந்து இருப்பதை பார்த்தார். அவரின் தேஜஸை கண்டு மயங்கிய துளசி அவர் மேல் காதலில் விழுந்தார்.
அந்த தியானத்தில் இருந்தவர் வேறு யாருமல்ல விநாயகர்தான். தியானத்தின் போது அவர் எழுப்பிய ஒலி அவரின் வசீகரத்தை மேலும் அதிகரித்தது. இதனால் அவரிடம் சென்று தன் காதலை வெளிப்படுத்த எண்ணினார். அதனை நிறைவேற்றவும் செய்தார்.
உடனடியாக பிள்ளையாரிடம் சென்று தன்னை மணந்துகொள்ளும்படி கேட்டார். இதனை சற்றும் எதிர்பார்க்காத பிள்ளையார் அமைதியாக துளசியின் காதலுக்கும், திருமணம் பற்றிய வேண்டுகோளுக்கு மறுப்பு தெரிவித்தார்.
துளசி அதற்கு காரணம் கேட்டபோது தான் தன் தந்தை சிவபெருமானுக்கு எப்படி பார்வதி தேவி சிறந்த துணையாக இருக்கிறாரோ அதேபோல தானும் தனக்கு தன் அன்னையை போல இருக்கும் பொருத்தமான பெண்ணையே திருமணம் செய்துகொள்ள இயலும் என்று கூறினார்.
விநாயகருக்கு சாபம்
விநாயகரின் இந்த பதில் துளசியின் கோபத்தை அதிகரித்தது, இதை தனக்கு நேர்ந்த அவமானமாக கருதினார். தன் உணர்ச்சிகளை மதிக்காத பிள்ளையாரை அதற்காக தண்டிக்க எண்ணினார். எனவே பிள்ளையாருக்கு சாபமிட துணிந்தார்.
தன் காதலை மதிக்காத பிள்ளையாருக்கு வருங்காலத்தில் அவர் எண்ணங்களுக்கு எதிராகவே திருமணம் நடக்க வேண்டும் என்று சாபமிட்டார். அதுவரை பொறுமைகாத்த பிள்ளையார் துளசியின் சாபத்தால் கோபமுற்றார். எனவே வருங்காலத்தில் நீ ஒரு அசுரனைத்தான் திருமணம் செய்துகொள்வாய் என்று துளசிக்கு சாபமிட்டார்.
காதலித்த பெண்ணுக்கு சாபம்
விநாயகர் அளித்த சாபத்தின் விபரீதத்தை உணர்ந்த துளசி தான் செய்த தவறை உணர்ந்தார். உடனடியாக தன் தவறை உணர்ந்த துளசி விநாயகரிடம் மன்னிக்கும்படி கெஞ்சினார். துளசி கண்ணீர்விட்டு கெஞ்சுவதை பார்த்த விநாயகர் மனமிறங்கினார்.
துளசி பூஜைக்கு கிடையாது
விநாயகர் அளித்த சாபத்தின் விபரீதத்தை உணர்ந்த துளசி தான் செய்த தவறை உணர்ந்தார். பிள்ளையார் தான் அளித்த சாபத்தையே வரமாக மாற்றினார். அதன்படி விஷ்ணுவின் அருளால் துளசி புனிதமான துளசி செடியாக மறுபிறப்பு எடுப்பாய் எனவும், விஷ்ணுவை உன்னை கொண்டு பூஜிப்பார்கள் எனவும் கூறினார்.
ஆனாலும் நீ என்னிடம் இருந்து எப்போதும் விலகிதான் இருப்பாய் என்னை உன்னை கொண்டு பூஜிக்கக்கூடாது என்று கூறினார். விநாயகர் கொடுத்த சாபம் பலித்தது, அதன்படி துளசி அரக்கர்களின் மன்னனான ஜலந்தரனையே மணக்க நேரிட்டது.
அரக்கனான அவன் செய்த தவறுகளுக்குகாக பின்னாளில் அவனை சிவபெருமானால் வதைக்கப்பட்டான். அதன்பின் தானும் இறந்த துளசி விநாயகர் கூறியது போலவே புனிதமான துளசி செடியாக பிறந்தார். இன்றைக்கும் விநாயகர் பூஜைக்கு துளசியை பயன்படுத்தாமல் உள்ளதன் காரணம் இதுதான்.
குறிப்பு : இது புராணக் கதைகளின் கிளை கதைகளிலிருந்து எடுக்கப்பட்டது