காதலனை நம்பி தமிழகம் வந்த இலங்கை பெண் கம்பி எண்ணும் பரிதாபம்

Arrest Love Srilankan Refugees
By Thahir Sep 11, 2021 03:06 AM GMT
Report

ராமேசுவரத்தில் இருந்து இலங்கைக்கு படகில் தப்பிச்செல்ல முயன்று நடுக்கடலில் உள்ள மணல்திட்டில் தவித்த இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த சிவனேசன் இவருடைய மகள் கஸ்தூரி (20). இறுதி கட்ட போரின் போது இலங்கையில் இருந்து தப்பி தமிழகம் வந்து இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்கி இருந்த இளைஞருடன் ஏற்பட்ட காதலால் கஸ்தூரி 2018ஆம் ஆண்டு விமானம் மூலம் சென்னை வந்துள்ளார்.

காதலனை நம்பி தமிழகம் வந்த இலங்கை பெண் கம்பி எண்ணும் பரிதாபம் | Love Srilankan Refugees Arrest

விசா முடிந்த பின்னும் இலங்கைக்கு திரும்பி செல்லாமல் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டில் சட்ட விரோதாக தங்கி வாழ்ந்து வந்துள்ளார்.

இந்த நிலையில், முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவலை கிராமத்தில் வசித்து வரும் கஸ்தூரியின் தந்தைக்கு உடல் நிலை சரியில்லாமல் இருப்பதால் இலங்கைக்கு திரும்பிச் செல்ல நேற்று அதிகாலையில் அவர் தனுஷ்கோடி வந்தார்.

அங்குள்ள நாட்டுப்படகு மூலம் கஸ்தூரி சட்டவிரோதமாக முல்லைத்தீவுக்கு புறப்பட்டுள்ளார். அப்போது தனுஷ்கோடியை அடுத்த இரண்டாம் மணல் திட்டு பகுதியில் இந்திய கடலோர காவல் படை ரோந்து படகு வந்ததையறிந்த படகோட்டி கஸ்தூரியை முதல் மணல் திட்டு பகுதியில் இறங்கி விட்டு சென்றதாக கூறப்படுகிறது.

இதையடுத்து மணல் திட்டில் இளம்பெண் ஒருவர் தவித்து வருவதாக கடலோர பொலிசாருக்கு தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து தனுஷ்கோடியில் இருந்து ஒரு மீன்பிடி படகில் கடலோர போலிசார் மணல் திட்டு பகுதிக்கு நேற்று காலை விரைந்து சென்றனர்.

பின்னர் மணல் திட்டில் தனியாக நின்று கொண்டு இருந்த கஸ்தூரியை படகில் ஏற்றி ராமேசுவரம் அனைத்து மகளிர் பொலிஸ் நிலையம் அழைத்து வந்தனர்.

விசாரணையில், இவரை அழைத்து வந்த இவரது தாயார் விமானம் மூலம் மீண்டும் இலங்கை திரும்பி சென்றுவிட்டதாகவும், அதன் பின்னர் கஸ்தூரி சென்னை வளசரவாக்கம், மதுரவயல், திருச்சி திருவெறும்பூர் உள்ளிட்ட இடங்களில் வாடகைக்கு வீடு எடுத்து தனியாக தங்கி இருந்ததாகவும் தெரியவருகிறது.

விசா காலம் முடிந்து விட்டதால் மீண்டும் இலங்கைக்கு திரும்பிச் செல்ல திட்டமிட்டிருந்தார். பின்னர் அவரது தாயாரிடம் போனில் பேசியபோது இலங்கையிலிருந்து படகு ஒன்றை அனுப்புவதாகவும் அந்த படகில் ஏறி இங்கு வந்து விடுமாறும் கூறியதாக தெரிகிறது.

இதனிடையில் வெளிநாடு தப்பிச் செல்ல அவர் தமிழகம் வந்தாரா என மத்திய உளவுத்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இதையடுத்து பொலிசார் அந்தப் பெண்ணின் செல்போனில் இருந்த எண்ணை வைத்து, அவரை இலங்கைக்கு அழைத்து செல்வதாக கூறி மீன்பிடி படகில் ஏற்றி மணல்திட்டு பகுதியில் இறக்கி விட்ட 3 பேரை பிடித்தனர்.

அவர்கள் தனுஷ்கோடி பாலம் பகுதியைச் சேர்ந்த முனியராஜ் (22), ஈசுவரன் (24), சிவிராஜ் (23) என்பது தெரியவந்தது. பின்னர் 3 பேரையும் கடலோர பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையில் கஸ்தூரியிடம் இருந்து பாஸ்போர்ட் உள்ளிட்ட இலங்கை குடியுரிமை ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.