இரண்டு முறை கட்டாய கரு கலைப்பு..காதல் திருமணத்தால் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!
வரதட்சணை கேட்டு அடித்து துன்புறுத்தியதில் இரண்டு முறை கரு கலைந்த கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனைவி அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சென்னை அடுத்த பாடியநல்லூர் பகுதியை சேர்ந்தவர் பிரவீனா. இவர் கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவர். இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது அவருடன் படித்த அஜித் என்ற நபருக்கும் காதல் ஏற்பட்டது.இவர் இந்து மதத்தை சார்ந்தவர்.
இதனையடுத்து பிரவீனாவை கல்லூரியை விட்டு நிற்குமாறும், திருமணம் செய்த பிறகு படிக்க வைப்பதாகவும் அஜித் கூறியதாக தெரிகிறது.
இதனையடுத்து அவர் கல்லூரியை பாதியில் நிறுத்திவிட்டு வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த வருடம் மார்ச் மாதம் இருவீட்டாரின் சம்மதத்துடன் இருவருக்கும் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.
திருமணம் இந்து முறைப்படி ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த பிரவீனா மற்றும் அவரது பெற்றோர் இது குறித்து அஜித்திடம் முறையிட்டனர்.
அப்போது விருப்பம் இருந்தால் திருமணம் செய்து கொள், இல்லை என்றால் கிளம்பி விடு என்று அஜித் தரப்பில் கூறப்பட்டதாக தெரிகிறது.
இதனையடுத்து வேறு வழியின்றி இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்ட பிரவீனா, அஜித்தின் வீட்டிற்கு சென்ற இரண்டாவது நாளே கிறிஸ்தவ மதத்திலிருந்து இந்து மதத்திற்கு மாற்ற முயற்சி செய்தனர்.
அதுமட்டுமில்லாமல் பிரவீனாவிடம் அவருக்கு என்ன நடந்தாலும் அதற்கு அஜித்தும், அவரது குடும்பத்தாரும் பொறுப்பாக மாட்டார்கள் என பத்திரத்தில் கையெழுத்து வாங்கியதாகவும் கூறப்படுகிறது.
பிறகு கணவர் அஜித்தும் அவரது குடும்பத்தாரும் 5 லட்சம் பணம், இருசக்கர வாகனம் மற்றும் நகைகளை போடுமாறு கேட்டு பலமுறை தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
அதேபோல் இரண்டுமுறை கருத்தரித்த போதும் அவர்கள் தாக்கியதில் பிரவீனாவிற்கு கருக்கலைப்பு ஆனதாக தெரிகிறது.
இதுகுறித்து கடந்த மாதம் மூன்றாம் தேதி பிரவீனா அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பத்தும் அவர்கள் ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது.
பின்னர் இருவரும் கவுன்சிலிங் அனுப்பப்பட்ட நிலையில் அந்த முயற்சியும் தோல்வியில் முடிந்தது. எனவே இன்று காலை மீண்டும் மகளிர் காவல் நிலையத்திற்கு வந்த பிரவீனா கணவர் மீது வரதட்சனை கேட்டதாகவும் மற்றும் அவர் தாக்கியதில் கருக்கலைப்பு நடந்ததாகக் கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் மனு அளித்துள்ளார்.
பிரவீனா வெளியில் செல்லும்போது அவரை பின்தொடர்ந்து மிரட்டி வருவதாகவும் கூறியுள்ளார். பின்னர் மகளிர் போலீசார் அவரை அழைத்து விசாரிப்பதாக கூறி பிரவீனா மற்றும் அவரது உறவினர்களை அனுப்பி வைத்தனர்.