”மதம் மாற மறுத்ததால்” காதல் திருமணம் செய்த தம்பதி மீது கொடூர தாக்குதல்
மதம் மாற மறுத்த சகோதரி கணவரை தாக்கிய டாக்டர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் சிரயின்கிலு பகுதியை சேர்ந்தவர் மிதுன் கிருஷ்ணன்(26). இந்து மதத்தை சேர்ந்த இவர் தீப்தி( 24) என்ற கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்தார்.
பெற்றோரின் சம்மதமின்றி கடந்த 29-ம் தேதி தீப்தியை திருமணம் செய்துகொண்டார். இதனை தொடர்ந்து தீப்தியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.
இதை தொடர்ந்து போலீசார் மிதுன் கிருஷ்ணன் - தீப்தி தம்பதிகளிடமும் அவர்கள் பெற்றோரிடம் விசாரணை நடைபெற்றது.
அதில், தீப்தி கிருஷ்ணனை திருமணம் செய்துகொண்டதையும், அவருடன் வாழ விருப்பம் தெரிவித்தார். இதனையடுத்து அனைத்து தரப்பினரையும் சமாதானப்படுத்தி போலீசார் அனுப்பி வைத்தனர்.
அதன்பின்னர், தீப்தியின் சகோதரரான டேனிஸ் காதல் தம்பதியினரை அணுகியுள்ளார். டாக்டரான டேனிஸ் தனது சகோதரி தீப்தியின் கணவரான மிதுனிடம் நீங்கள் கிறிஸ்தவ மத வழிபாட்டு தளத்திற்கு வர வேண்டும், உங்களிடம் திருமணம் குறித்து பேச வேண்டும் என கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து மிதுன் தனது மனைவி தீப்தியுடன் கிறிஸ்தவ மத வழிபாட்டு தளம் சென்றுள்ளார். அங்கு வைத்து மிதுனிடம் நீங்கள் மதம் மாற வேண்டும் என கூறியுள்ளார்.
ஆனால், அதற்கு மிதுன் மறுப்பு தெரிவித்துவிட்டார்.மிதுன் மற்றும் தீப்தியிடம் வீட்டிற்கு வந்து தாயாரை சந்திக்குமாறு டேனிஸ் கூறியுள்ளார்.
இதனையடுத்து, தீப்தியின் தாயாரை சந்திக்க மிதுன்-தீப்தி சென்றுள்ளனர். ஆனால், தீப்தியின் தாயார் தம்பதிகள் இருவரையும் வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை.
அப்போது தனது நண்பர்களுடன் அங்கு வந்த டேனிஸ் மிதுனை கண்மூடித்தனமாக தாக்கினார். தடுக்க முயன்ற தீப்தியையும் தாக்கினார்.
படுகாயமடைந்த மிதுன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தாக்குதலையடுத்து, தனது சகோதரன் டேனிஸ் மீது தீப்தி போலீசில் புகார் அளித்துள்ளார்.
மதம் மாற மறுத்ததால் எனது கணவரை டேனிஸ் தாக்கியதாக தீப்தி குற்றஞ்சாட்டியுள்ளார். ஆனால், வீட்டிற்கு வந்த மிதுன், தீப்தியின் தாயார் குறித்து அவதூறக பேசியதாலேயே தாக்கியதாக டேனிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.