“கல்யாணமான பொண்ணுக்கு லவ் லெட்டர் குடுத்தா சும்மாவா விடுவாங்க” - கண்டித்த உயர்நீதிமன்றம்
திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம் என மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நாக்பூரில் பலசரக்கு கடை வைத்துள்ள ஸ்ரீகிருஷ்ணாதவாரி என்பவர் அங்கு வேலை செய்த திருமணமான பெண் ஒருவருக்கு கடந்த 2013 ஆம் ஆண்டு காதல் கடிதம் கொடுத்துள்ளார். காதலை அப்பெண் ஏற்க மறுக்கவே மறுநாள் அவரை நோக்கி ஆபாசமாக செய்கைகளைச் செய்து காட்டி காதல் கடிதத்தில் எழுதியிருப்பதை வெளியே காட்டக்கூடாது என்று எச்சரித்துள்ளார்.
இதனையடுத்து ஸ்ரீகிருஷ்ணாதவாரி மீது காவல்துறையில் புகாரளிக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு நாக்பூர் நீதிமன்றம் 2 ஆண்டுகால கடுங்காவல் தண்டனை, ரூ.40 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த ஸ்ரீகிருஷ்ணாதவாரி அந்தப் பெண் தன் மளிகைக் கடையில் பொருட்களை கடனாக வாங்கிக் கொண்டு, காசு தரவில்லை இதனால் அதை கேட்டவுடன் தன் மீது பாலியல் புகார் கூறுகிறார் என்று தெரிவித்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது அவரது கண்ணியத்தை சீர் குலைப்பதற்குச் சமமானது என்றும், கவிதை ரசம் சொட்டச் சொட்ட தூய மொழியில் காதல் கடிதம் கொடுத்திருந்தாலும், கவிதைகளாக வடித்திருந்தாலும் அது தவறு என்றும் தெரிவித்தனர்.
மேலும் ஸ்ரீகிருஷ்ணாதவாரி திருந்துவதற்கு வாய்ப்பளித்து பிரிவு 506-ன் கீழ் அவரது தண்டனை ஓராண்டாக குறைக்கப்பட்டு, அபராதத்தொகை ரூ.90 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டது.