மனைவியை பிரிந்து மாணவி மீது காதல் - அடித்தே கொல்லப்பட்ட இளைஞன்!
மாணவியின் தந்தை அந்த இளைஞனை கொடூரமாக தாக்கி கொலை செய்திருக்கிறார்.
மாணவியுடன் காதல்
திருவண்ணாமலை, அனந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவேலன்(27). தனியார் கூரியர் நிறுவனத்தில் வேலை செய்துவந்த வடிவேலனுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது.

ஆனால், சில மாதங்களிலேயே கருத்து - வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்து மனைவி சென்றுவிட்டார். தொடர்ந்து அதே பகுதியைச் சேர்ந்த பிளஸ்-2 பயிலும் 16 வயது மாணவியுடன் காதலில் ஈடுபட்டுள்ளார்.
இது குறித்து மாணவியின் பெற்றோருக்குத் தெரியவந்ததும், வடிவேலனை அழைத்து அவர்கள் கண்டித்துள்ளனர். இருப்பினும் மாணவியிடம் பேச முயன்று தொல்லை கொடுத்துவந்திருக்கிறார்.
தந்தை வெறிச்செயல்
இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் தந்தை சங்கர் (46) தனது உறவினர் சிவஞானத்தை அழைத்துகொண்டு பைக்கில் வந்த வடிவேலனை மடக்கி கட்டைகளால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

அதில் மயங்கி விழுந்ததால் இருவரும் அங்கிருந்து தப்பியுள்ளனர். தகவலறிந்து வடிவேலன் உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். பின் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் மாணவியின் தந்தை உட்பட இருவரையும் கைது செய்தனர்.