இந்தியாவில் மேட்ச் பிக்சிங் செய்ய மிரட்டினார்கள் - நியூசிலாந்து வீரர் பரபரப்பு புகார்
கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட இந்தியாவில் என்னை மிரட்டினார்கள் என லூயி வின்செண்ட் தெரிவித்துள்ளார்.
லூயி வின்செண்ட்
நியூசிலாந்தை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரரான லூயி வின்செண்ட், நியூசிலாந்து அணிக்காக 108 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 23 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இதனையடுத்து கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக கடந்த 2014 ஆம் ஆண்டு இவருக்கு கிரிக்கெட் விளையாட வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு உள்ளூர் போட்டிகளில் மட்டும் விளையாட அனுமதி வழங்கப்பட்டது.
கிரிக்கெட் சூதாட்டம்
தற்போது தான் எவ்வாறு சூதாட்டத்தில் ஈடுபட்டேன் என்பது குறித்து லூயி வின்செண்ட் மனம் திறந்து பேசியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், "நான் சிறுவயதில் இருந்தே சண்டையும் சச்சரவும் உள்ள குடும்பத்தில் வளர்ந்ததால், என்னிடம் பேச கூட ஆள் இருக்க மாட்டார்கள்.
இப்படியான நிலையில், நான் இந்தியாவுக்கு விளையாட வந்த போது சூதாட்டத்தில் ஈடுபடும் கும்பல் என்னை வலுக்கட்டயமாக இழுத்து சூதாட்டத்தில் ஈடுபடுத்தியது. எனக்கு நண்பர்கள் இல்லாததால், சூதாட்ட தரகர்களுடன் இணைந்து அவர்களின் குழுவில் முக்கிய உறுப்பினர் போல் மாறிவிட்டேன்.
மிரட்டல்
அப்படியே சூதாட்டம் மற்றும் லஞ்சத்தில் என்னை மெல்ல மெல்ல ஈடுபட வைத்தார்கள். ஒரு கட்டத்தில் நான் செய்வது தவறு என்பதை உணர்ந்து, இந்த கும்பலிடம் இருந்து தப்பிக்க முயன்ற போது, அவர்களுடைய நடவடிக்கை மாறியது. அதன் பின்னர் என்னை மிரட்டி கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட வைத்தார்கள்.
ஒரு முறை அவர்களுக்காக சூதாட ஒப்புக்கொண்டு விட்டால் அதிலிருந்து வெளியேறுவது கஷ்டம். இதிலிருந்து தப்பிக்க ஒரே வழி உண்மையை ஒப்புக்கொண்டு தண்டனை பெறுவதுதான் என்று முடிவெடுத்து வீரர்கள் நல வாரியத்தில் நடந்த சம்பவங்களை கூறி நான் என்ன செய்ய வேண்டும் என கேட்டேன்.
அதன் பின்னர் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்தான் என்னை அரவணைத்து வழி நடத்தியது. இதிலிருந்து நான் மீண்டு வர 10 ஆண்டுகள் ஆனது. தற்போது சூதாட்டத்திற்கு எதிரான நடைமுறைகளை வீரர்களுக்கு கற்றுத் தரும் குழுவில் இயங்கி வருகிறேன்" என பேசினார்.