"தீவிரவாதத்தில் ஈடுபடுபவர்களை தேடுவது போல் முன்னாள் அமைச்சரை திமுக அரசு கையாள்கிறது" - ஆர்.பி உதயகுமார்

politics tamil nadu ex minister rajendra balaji look out notice r.b udhayakumar
By Swetha Subash Dec 23, 2021 08:39 AM GMT
Swetha Subash

Swetha Subash

in அரசியல்
Report

தீவிரவாதியைத் தேடுவது போல முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை தமிழக அரசு கையாள்கிறது என்றும்,இது திமுக அரசின் காழ்ப்புணர்ச்சி செயல் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த அதிமுக ஆட்சியில் தமிழக பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி,ஆவின் நிறுவனத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.3 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக புகார் எழுந்தது.

ரவீந்திரன், விஜய் நல்லதம்பி என்பவர்கள் அளித்த புகாரில் ராஜேந்திர பாலாஜி மீது இரு வழக்குகள் பதியப்பட்டது.

இதனை தொடர்ந்து,அவரது முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து,கடந்த 17-ஆம் தேதி முதல் தலைமறைவாக இருந்து வரும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை,காவல்துறையினர் 8 தனிப்படைகள் அமைத்து தமிழகம் மட்டுமல்லாமல் கர்நாடகா,கேரளா போன்ற மாநிலங்களிலும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்நிலையில்,தீவிரவாதியைத் தேடுவது போல முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை தமிழக அரசு கையாள்கிறது என்றும்,இது திமுக அரசின் காழ்ப்புணர்ச்சி செயல் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக, செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:

"முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழக்கு நிலுவையில் உள்ள நிலையில்,தீர்ப்புக்காக அவர் காத்திருக்கிறார்.மேலும்,சட்ட ஆலோசனைகளை அவர் மேற்கொண்டுள்ளார் என்பதுதான் நிதர்சனமான உண்மை.

ராஜேந்திர பாலாஜி எங்கு இருக்கிறார் என்பது அவருக்கு மட்டுமே தெரியும். இது தொடர்பாக காவல்துறை விசாரிக்கிறது.ஒருவர் மீது வழக்கு இருக்கிறது என்பதாலேயே அவரைக் குற்றவாளியாகப் பார்க்கமுடியாது.

இந்த நிலையில், தீவிரவாதம் மற்றும் மதவாதத்தில் ஈடுபடுகிற நபர்களை கையாள்வதுபோல ஒரு முன்னாள் அமைச்சரை கையாள்வது பழிவாங்கும் நடவடிக்கையாக தெரிகிறது.

இந்த விசயத்தில் திமுக அரசு காழ்ப்புணர்ச்சியோடு செயல்படுகிறது" என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில்,பணமோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக காவல்துறையினர் இன்று லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

ராஜேந்திர பாலாஜி வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதை தடுக்கும் வகையில் அனைத்து விமான நிலையங்களுக்கும் காவல்துறையினர் இன்று லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.