உனக்கு பெரிய எதிர்காலம் இருக்கு; உம்ரன் மாலிக்கை புகழ்ந்து பேசிய முன்னாள் வீரர்

Umran Malik
By Irumporai Jun 29, 2022 10:39 PM GMT
Report

அயர்லாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி.20 போட்டியில் மிக சிறப்பாக பந்துவீசிய இந்திய அணியின் இளம் வீரரான உம்ரன் மாலிக்கை முன்னாள் பாகிஸ்தான் வீரரான டேனிஷ் கனேரியா பாராட்டி பேசியுள்ளார்.

அயர்லாந்து சென்றிருந்த ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி, அயர்லாந்து அணியுடன் இரண்டு டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.

இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டி.20 போட்டி நேற்று (28ம் தேதி) நடைபெற்றது.

டப்லினில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்கள் எடுத்தது.

இந்திய அணியில் அதிகபட்சமாக தீபக் ஹூடா 104 ரன்களும், சஞ்சு சாம்சன் 77 ரன்களும் எடுத்தனர். இதன்பின் 226 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை துரத்தி களமிறங்கிய அயர்லாந்து அணி வீரர்களும், அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி மளமளவென ரன் குவித்ததால், கடைசி ஒரு ஓவரில் 17 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை வரை வந்தது.   

இந்திய அணியின் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்த தீபக் ஹூடா, உம்ரன் மாலிக் போன்ற இளம் வீரர்களை முன்னாள் வீரர்கள் பலர் வெகுவாக பாராட்டி வருகின்றனர். அந்தவகையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான டேனிஷ் கனேரியா, அயர்லாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி.20 போட்டியில் மிக சிறப்பாக பந்துவீசிய உம்ரன் மாலிக்கை வெகுவாக பாராட்டி பேசியுள்ளார்.

இது குறித்து டேனிஷ் கனேரியா பேசுகையில், “உம்ரன் மாலிக் மிக சிறப்பாக பந்துவீசினார், அவரது பந்துவீச்சில் அதிக வேகம் உள்ளது, ஆனால் இன்னும் தனது பந்துவீச்சில் முன்னேற்றத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். இது ஆரம்பம் தான், உம்ரன் மாலிக் கிரிக்கெட்டில் பயணிக்க வேண்டிய தூரம் அதிகம் உள்ளதால் அதற்கு ஏற்றார் போல் தனது குறைகளை சரி செய்து கொள்ள வேண்டும். ஐபிஎல் தொடரை போன்று சர்வதேச போட்டிகளில் சாதரணமாக யாராலும் விளையாடிவிட முடியாது, சர்வதேச போட்டிகளில் சவால் நிறைந்தது, அதிலும் கடைசி ஓவர்களை வீசுவது சாதரண விசயமே கிடையாது” என்று தெரிவித்தார்