"பளபளப்பான ஜிகினா வாழ்க்கை வாழல..இருந்தாலும் மக்கள் மனசுல இடம் பிடிச்சதே போதும்” - லொள்ளு சபா மனோகர் உருக்கம்

interview lollu saba manokar talks about troublesome life
By Swetha Subash Dec 31, 2021 09:02 AM GMT
Report

கையை சுற்றி சுற்றி ஒரு மார்க்கமாக இழுத்துப் பேசியே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் லொள்ளு சபா மனோகர்.

அண்மையில் இவர் தனியார் இணைய சேனலுக்கு ஒரு பேட்டியளித்துள்ளார். அப்போது,

“ஆரம்ப நாட்களில் எல்பிஜி கேஸ் விநியோகம் செய்பவர், அதன்பின்னர் நீதிமன்றத்தில் குமாஸ்தா வேலை, அதன் பின்னர் 8 ஆண்டுகளாக வங்கியில் தற்காலிகப் பணி என கஷ்டப்பட்டேன்.

இப்போது சினிமா, வங்கி வேலை என இரண்டும் இருக்கிறது. ஆனாலும், நான் மக்கள் எதிர்பார்க்கும் பளபளப்பான ஜிகினா வாழ்க்கை வாழவில்லை.

லொள்ளு சபா ஷோ தான் எனக்கு அடையாளத்தைக் கொடுத்தது. டிவி ஷோ தவிர்த்து நாடகங்களிலும் நடித்துள்ளேன். இயக்குநர்கள் தான் எங்களை கை தூக்கிவிட வேண்டும்.

கொரோனா வருவதற்கு முன்பு மாதம் 30 நாளும் நான் பிசியாக படங்களில் நடித்துக் கொண்டு தான் இருந்தேன். இந்த மூன்று வருடங்களாக எனக்கு எந்த வேலையும் இல்லாமல் மிகுந்த கஷ்டப்பட்டு வருகிறேன்.

கடைசியாக, ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் யோகி பாபு நடிப்பில் வெளிவந்த பேய்மாமா என்ற படத்தில் நடித்தேன். அதன் பின்னர் சரியாக வேலையில்லை.

சந்தானம், வடிவேலு என எல்லா நடிகர்களுடன் நடித்திருக்கிறேன். இருந்தாலும் அவர்கள் எல்லாம் அவர்களுக்குத் தேவையான நபர்களைத் தான் கூடவே வைத்து சம்பளம் போட்டு நடிக்க வைக்கிறார்கள்.

என்னை அப்பப்ப அவர்களுக்கு தேவைப்படும் போது கூப்பிடுவார்கள். அதனால் அவர்களுக்கு வேண்டியவர்களுக்கு தான் வாய்ப்பு அதிகம் சினிமாவில் கிடைக்கிறது.

ஆனா ஒண்ணு, நாம என்ன வேலை பார்த்தாலும் கொஞ்சமாவது பணத்தை சேமித்து வைக்க வேண்டும். நான் 10 லட்சம் வரை பணத்தை இழந்துவிட்டேன். என்னை ஒருவர் ஏமாற்றிவிட்டார்.

இந்த வழக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது.

என்னுடைய இந்தப் பழைய வீட்டை பார்த்து ஷாக் ஆக வேண்டாம். நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே இந்த வீட்டில் தான். என்னோட முன்னோர்கள் ஆசிர்வாதம் இங்கிருந்தால் எனக்குக் கிடைக்கும் என நான் நம்புகிறேன்.

இந்த வீடு இடிந்து விழுகிற நிலைமையில் தான் இருக்கு. அதனால் எதற்கு இதை சரி செய்யணும் என்று விட்டுட்டேன். இந்த வீடு 25 வருடமாக வழக்கில் இருக்கிறது. வழக்கு முடியட்டும் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்.

சினிமாத் துறையில் இருந்தும் நான் பணம் சம்பாதிக்கவில்லை. என்றாலும் மக்கள் மனதில் இடத்தை சம்பாதித்தது நினைத்து எனக்கு சந்தோஷமாக இருக்கிறது” என லொள்ளுசபா மனோகர் பேசியுள்ளார்.