மீண்டும் இன்று கூடுகிறது சட்டப்பேரவை: 9 பேருக்கு இரங்கல் தீர்மானம்
கடந்த 13ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையின் நிதிநிலை அறிக்கை திமுக அரசால் தாக்கல் செய்யப்பட்டது.
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நிலையில் மறுநாள் வேளாண் துறைக்கென தனியாக நிதிநிலை அறிக்கை அத்துறை அமைச்சர் எம்.ஆர். கே பன்னீர்செல்வம் செல்வத்தால் தாக்கல் செய்யப்பட்டது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சட்டப்பேரவை கூட்டத் தொடருக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது மீண்டும் இன்று காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கத்தில் சட்டப்பேரவை தொடங்குகிறது.
இந்நிலையில் சட்டப் பேரவை இன்றைய நிகழ்வில் திண்டிவனம் ராமமூர்த்தி, அய்யாறு வாண்டையார் உள்ளிட்ட மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் 9 பேருக்கு இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்படும் என்று சட்டப் பேரவை செயலாளர் கி.சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
ஸ்டேன் சுவாமி, வே.ஆனைமுத்து, மறைந்த மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் , மருத்துவர் காமேஸ்வரன், தமிழறிஞர் இளங்குமரனார் உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. இதை தொடர்ந்து நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான பொது விவாதம் இன்று நடக்கிறது.
இந்த விமானமானது 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தொடர்ந்து 23ஆம் தேதி முதல் மானியக் கோரிக்கை மீதான விவாதம், 23ஆம் தேதி நீர்வளத்துறை, 24ஆம் தேதி நகராட்சி நிர்வாகம், 25ஆம் தேதி ஊரக வளர்ச்சி என துறைவாரியாக விவாதங்கள் நடைபெற உள்ளன. அடுத்த மாதம் 21 ஆம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது