தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு கட்டுப்பாடு விதிக்காத தமிழக அரசு

lockdown cases shock tasmac
By Praveen Apr 18, 2021 03:19 PM GMT
Report

தமிழகத்தில் புதிய ஊரடங்கு அமலுக்கு வரப்போகும் நிலையில் டாஸ்மாக் கடைகளுக்கு மட்டும் எந்த ஒரு கட்டுப்பாடும் விதிக்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பரவலைத் தடுக்க மீண்டும் பல கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ள தமிழக அரசு, தொற்று அபாயம் அதிகமுள்ள டாஸ்மாக் மதுக்கடைக்கோ அல்லது மதுபான பாருக்கு எந்த கட்டுப்பாடுகளையும் விதிக்கவில்லை.

கொரோனாவைக் கட்டுப்படுத்த பல்வேறு துறைகளில் தமிழக அரசு மீண்டும் கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளது. அதுகுறித்து பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவில், காய்கறி அங்காடிகள், திரையரங்குகள், மால்கள், உணவகங்களில், வாடகை வாகனங்கள் செயல்பட பல விதிமுறைகளும் வகுத்துள்ளது.

ஆனால், தொற்று பரவும் அபாயம் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கோ, தனிமனித இடைவெளியை கடைபிடிக்க முடியாத மதுபான பாருக்கோ அரசு எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கவில்லை.

கடந்த ஆண்டு பொதுமுடக்கத்தின் காரணமாக மார்ச் முதல் ஜூலை வரை 4 மாதங்கள் மதுபான கடைகள் மற்றும் பார்கள் மூடப்பட்டிருந்தன. அதன்பின் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட நிலையில், அதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது.

அதன்பின் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த தமிழக அரசு, கட்டுப்பாடுகளுடன் டாஸ்மாக் கடைகளைத் திறக்க அனுமதி பெற்றது குறிப்பிடத்தக்கது.