தமிழகத்தில் மீண்டும் லாக்டவுன் வருமா? தலைமை செயலாளர் திடீர் ஆலோசனைக்கூட்டம்!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை தற்போது அதிகமாக பரவி வருகிறது. இந்நிலையில் தலைமை செயாளர் இன்று திடீரென்று ஆலோசனை கூட்டம் நடத்துகிறார். சீனாவின் உகான் நகரில் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பரில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று உலகம் முழுவதையும் கட்டுப்பாட்டில் வைத்து ஆக்கிரமிப்பு செய்து வருகிறது.
அதன் தாக்கத்தில் இருந்து உலக நாடுகள் இன்னும் மீளாத நிலையில் உள்ளது. இந்தியாவில் கொனோராவின் தாக்கம் குறைந்து வந்த நிலையில் தற்போது கொரோனாவின் இரண்டாம் அலை வீரியம் எடுத்து வருகிறது. நாளொன்றுக்கு ஆயிரத்துக்கும் குறைவாக இருந்த பாதிப்பு, கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக 3,500ஐ எட்டி இருக்கிறது.
இந்நிலையில், கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி போடும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தடுப்பூசி போடப்பட்டு வரும் சூழலிலும் பாதிப்பு தற்போது நாளுக்கு நாள் பெருகிக்கொண்டு வருகிறது. இதனால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மீண்டும் லாக்டவுன் போட்டு விடுவார்களா என்ற கேள்வியும் மக்களிடையே எழுந்துள்ளது.

லாக்டவுன் குறித்து விளக்கம் அளித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தேர்தலுக்கு பிறகு லாக்டவுன் போடப்படும் என்ற வதந்தியை நம்ப வேண்டாம் என்று கூறினார். 7ம் தேதிக்கு பிறகு கட்டுப்பாடுகள் தீவிரமாக இருக்கும் என்று அறிவித்தார். நேற்று தமிழகத்தில் அனைவரும் எதிர்பார்த்த தேர்தல் நடைபெற்று முடிந்தது.
இதனையடுத்து, தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்து ராதாகிருஷ்ணனுடன் இன்று பிற்பகல் அவசரமாக ஆலோசனை நடத்த இருக்கிறார். இக்கூட்டத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் பங்கேற்க இருக்கிறார்கள்.
இந்த கூட்டம் முடிவில் மறுபடியும் ஊரடங்கு கடுமையாக்கப்படுமா? எந்த மாதிரியான கட்டுப்பாடுகள் வெளியாகும் என்று மக்கள் எதிபார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.