தமிழகத்தில் இன்று மட்டும் 37 லட்ச கடைகள் அடைப்பு..பல்லாயிரம் கோடி ரூபாய் இழப்பு
தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கை முன்னிட்டு சுமார் 37 லட்ச கடைகள் அடைக்கப்பட்டுள்ளன,இதனால் இன்று ஒரு நாளில் பல்லாயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
பெட்டிக்கடைகள் தொடங்கி பெரிய ஷாப்பிங் மால்கல் வரை அரசின் உத்தரவை ஏற்று இன்று மூடப்பட்டிருந்தது. இதனால் பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பும் ஏற்பட்டிருக்கிறது. பொதுவாக மற்ற நாட்களை காட்டிலும் வார விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை அன்று தான் பொதுமக்கள் அதிகமாக ஷாப்பிங் செல்வார்கள்.
இதனால் வர்த்தகமும் சூடு பிடித்து நடைபெறும். இந்நிலையில் இன்று ஊரடங்கு காரணமாக நேற்றைய தினமே பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை முன் கூட்டியே வாங்கி வைத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே இது தொடர்பாக கூறும் வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, ஊரடங்கை அரசு திடீரென அறிவிப்பதால் பொதுமக்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுவதாகவும், மக்கள் பதற்றத்துக்கு உள்ளாவதால் கடைகளில் கூட்டம் அதிகமாகி கொரொனா பரவலுக்கு அது அதிகம் வழி வகுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து வணிக சங்க அமைப்பினர் கூறியதாவது,
ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. முன்னதாக இது போன்ற ஊரடங்குகளை அமல்படுத்துவதற்கு முன்பு சற்று எங்களுடன் கலந்தாலோசித்திருக்கலாம். இதன் பிறகாவது ஊரடங்கு முடிவு எடுப்பதற்கு முன்பு எங்களிடம் கலந்தாலோசியுங்கள் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.