அடுத்த வார ஊரடங்கில் என்னென்ன தளர்வுகள்? - வழிபாட்டு தலங்கள், துணிக்கடைகளுக்கு அனுமதி?
தமிழகத்தில் அடுத்த வார ஊரடங்கில் என்னென்ன தளர்வுகள் என்பது குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை மேற்கொள்கிறார்.
தமிழகத்தில் கடந்த மே மாதம் முதல் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கானது தற்போது மூன்று பிரிவுகளாக பிரித்து தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது.
நாளை மறுநாளோடு இந்த வார ஊரடங்கு முடிவடையவுள்ள நிலையில், அடுத்த வார ஊரடங்கில் என்னென்ன தளர்வுகள் அளிக்கப்படும் என முதலமைச்சர் மு,க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
பிரிவு 1இல் இடம்பெற்றிருந்த 11 மாவட்டங்களுக்கு கடந்த மாதம் தளர்வுகள் அறிவிக்கப்படவில்லை. பிரிவு 2இல் இடம்பெற்றிருந்த 23 மாவட்டங்களுக்கு பல்வேறு தளர்வுகள் அறுவிக்கப்பட்டன.
முக்கியமாக அத்தியாவசிய பணிகளுக்கான கடைகள் மாலை 7 மணி வரை திறந்துவைக்க அனுமதியளிக்கப்பட்டன. பிரிவு 3ல் இடம்பெற்ற மாவட்டங்களில் மேற்சொன்ன கடைகள் 7 மணி வரை திறக்க அனுமதியளிக்கப்பட்டது.
இதில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தன. இங்கு பேருந்து போக்குவரத்துக்கும் அனுமதியளிக்கப்பட்டது. மேலும், சென்னையில் மெட்ரோ ரயில்கள் இயங்கவும் அனுமதியளிக்கப்பட்டது.
இந்த வார ஊரடங்கில், கடைகள் திறந்திருக்கும் நேரமும் அதிகரிக்கப்படும். பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களைத் தவிர்த்து பிற மாவட்டங்களில் இம்முறை சிறிய அளவிலான நகைக் கடைகள், துணிக்கடைகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் சிறிய அளவிலான வழிபாட்டுத் தலங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என தெரிகிறது.
11 மாவட்டங்களுக்கு இம்முறை பல முக்கிய தளர்வுகள் அறிவிக்கப்படும். ஆனால் பொது போக்குவரத்துக்கு அனுமதியளிக்கப்படாது எனவும் கூறப்படுகிறது.