நாளை முதல் ஜூலை 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு - என்னென்ன தளர்வுகள் தெரியுமா?
தமிழகத்தில் நாளை முதல் அமலாகும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஜூலை 31-ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மே மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த வார ஊரடங்கில், பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, புத்தக விநியோகம், பாடத்திட்ட தயாரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தொழிற் பயிற்சி நிலையங்கள், தட்டச்சு, சுருக்கெழுத்து நிலையங்கள் 50% மாணவர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
திருமண நிகழ்ச்சிகளில் 50 பேரும், இறுதிச் சடங்கில் 20 பேரும் மட்டுமே பங்கேற்க்க அனுமதி தொடரும். நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி தரப்பட வேண்டும்.

திரையரங்குகள், டாஸ்மாக் பார்கள், நீச்சல் குளங்கள், சமுதாயம் மற்றும் அரசியல் சார்ந்த கூட்டங்களுக்கு தடை நீடிக்கப்படுகிறது. புதுச்சேரி தவிர்த்து மற்ற மாநிலங்களுக்கு இடையேயான தனியார் மற்றும் அரசுப் பேருந்து போக்குவரத்துக்கு தடை நீடிக்கப்படுகிறது.
பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாசார நிகழ்வுகள், உயிரியல் பூங்காக்களுக்கு தடை நீடிக்கிறது. தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 31- ஆம் தேதி வரை நீடிக்கப்படுகிறது". இவ்வாறு அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த அரசாரணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.