’இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா’ மீண்டும் வருகிறதா ஊரடங்கு?
இந்தியாவில் கடந்த மூன்று மாதங்களாக குறைந்து வந்த கொரோனா தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. செப்டம்பர் மாதத்தில் தினசரி ஒரு லட்சம் பாதிப்புகள் வரை தொட்ட கொரோனா அதன் பின்னர் படிப்படியாக குறையத் தொடங்கியது. இதனால் ஊரடங்கிலும் தொடர் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
ஆனால் ஜனவரி மாதத்தின் இறுதியிலிருந்து கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. இந்தியாவில் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. தமிழகத்தில் கடந்த 15 நாட்களில் தினசரி பாதிப்புகள் 50% வரை அதிகரித்துள்ளது.
மகாராஷ்டிராவில் நாக்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பஞ்சாப்பிலும் ஒரு சில மாவட்டங்களில் ஊரடங்கும், இரவு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்திய அளவில் தொடர்ந்து இரண்டாவது நாளாக 20,000க்கும் அதிகமான கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.
இதனால் மீண்டும் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என சந்தேகங்கள் எழத் தொடங்கியிருக்கிறது. கொரோனா தடுப்பூசி வழங்கும் பணிகள் ஒருபுறம் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்தியா முழுவதும் இரண்டு கோடிக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டாலும் முகக்கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் மீண்டும் முழு ஊரடங்கு வருவதற்காக வாய்ப்புகள் குறைவு என்றும் தெரிவித்துள்ளனர்.