பொதுமுடக்கத்தை கடைசி ஆயுதமாக பயன்படுத்த வேண்டும் - பிரதமர் மோடி பேச்சு

corona speech people lockdown primeminister
By Praveen Apr 20, 2021 04:09 PM GMT
Report

கொரோனா தொற்று சூறாவளியாக பரவி வரும் நிலையில் மாநிலங்கள் பொது முடக்கத்தை கடைசி ஆயுதமாக பயன்படுத்த வேண்டும் என இந்தியா பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் குறித்து நாட்டு மக்களிடம் இந்தியா பிரதமர் மோடி காணொளி வாயிலாக உரையாடினார். அப்போது அவர் தெரிவித்ததாவது, கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் துக்கத்தில் பங்கெடுக்கிறேன்.

நாட்டு மக்கள் அனைவரும் நினைத்தால் கொரோனாவை முறியடிக்க இயலும் என நம்புகிறேன்.ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது.‌ கொரோனா இரண்டாவது அலை சூறாவளி போல் நாட்டைத் தாக்கி வருகிறது இந்த நேரத்தில் நாட்டு மக்கள் அனைவரும் பொறுமையை கடைபிடிக்க வேண்டும்.

மேலும் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்வோம். மருத்துவ நிபுணர்களின் தொடர் உழைப்பால் கடந்தாண்டு இறுதியில் தடுப்பூசி கிடைத்தது. இவர்களின் அசாதரண உழைப்பால் 2 தடுப்பூசி மருந்துகளை இந்தியா தயாரித்தது.கொரோனா தடுப்பு சம்பந்தமான எந்த ஒரு வசதிகளும் நம்மிடம் இல்லாமல் இருந்தது.

முகக்கவசம் தயாரிப்பு முதல் வெண்டிலட்டர் தயாரிப்பு வரை கடந்த சில மாதங்களில் தான் நாம் பெரிய அளவில் மருத்துவ கட்டமைப்புகளை உருவாக்கி இருக்கிறோம் இதனை நினைத்து பெருமைக் கொள்கிறேன். ஒவ்வொரு இந்தியரும் தனது சக இந்தியருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

இளைஞர்கள் கொரோனா தடுப்பிற்கு எதிரான போரில் சரியான விஷயங்களை செய்ய முன்வர வேண்டும் என தெரிவித்தார். அதுமட்டுமின்றி வீட்டில் உள்ள பெரியவர்கள் தேவையில்லாமல் வெளியே செல்வதை தடுப்பது அந்த வீட்டில் உள்ள குழந்தைகளின் பொறுப்பு குறிப்பாக இளைஞர்களின் கடமை.

தற்போது நமக்கு பொதுமுடக்கம் என்பது கடைசி வாய்ப்பு தான்,மேலும் பொது முடக்கத்தை அமல்படுத்தும் போது மாநில அரசுகள் அதனை கடைசி ஆயுதமாக தான் பயன்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.