தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. நேற்று 1,03,798 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 2731 ஆக உள்ளது.
சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 1,489 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 9 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். 674 பேர் சிகிச்சை முடித்துக் கொண்டு வீடு திரும்பியுள்ளனர்.
இந்த திடீர் அதிகரிப்பால் தமிழக அரசு துரித நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. ஏற்கெனவே சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் நேற்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.
சுகாதாரத்துறை அமைச்சர், அதிகாரிகள் பங்கேற்ற அந்தக் கூட்டத்தில் அடுக்கட்ட நடவடிக்கைகள் பற்றி முடிவெடுக்கப்பட்டதாக தெரிகிற நிலையில் இன்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக ஆலோசனையில் ஈடுபட்டார்.
இதனை தொடர்ந்து தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலாகும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.