`20 ஓவரில் ஒரு ஓவர் தான் முடிந்திருக்கு' - டைமிங்கிள் ரைமிங்காக பேசிய அமைச்சர்
`திமுக ஆட்சியின் 4 மாத சாதனை என்பது 20 ஓவர் கிரிக்கெட்டில் ஒரு ஓவர் முடிவடைந்த மாதிரி. அதிலேயே எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றியுள்ளது.
இனி, அடுத்து வரும் ஒவ்வொரு திட்டங்களும் மக்களை கவரும் வகையில் இருக்கும்’ என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கருத்து தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்டம், வெள்ளியணை பகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் மாவட்ட ஊராட்சி குழு 8 வது வார்டு பதவிக்கு திமுக சார்பில் கண்ணையன் என்பவர் போட்டியிடுகிறார்.
அவரை ஆதரித்து, தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
அதோடு, தேர்தல் பணிமனையையும் திறந்து வைத்தார். அதில், கலந்துகொண்ட திமுகவினர் முகக்கவசம் அணியாமலும், சமூகஇடைவெளியை கடைப்பிடிக்காமலும் கலந்துகொண்டது, சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிகழ்ச்சியில், கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் சிவகாமசுந்தரி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில வர்த்தக பிரிவு செயலாளர் விசா.ம.சண்முகம், கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் சின்னசாமி, தி.மு.க ஒன்றிய செயலாளர்கள் என பல நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, வெள்ளியணை கடைவீதியில் நடந்து சென்று பொதுமக்களிடம் துண்டறிக்கை வழங்கி, வாக்கு சேகரித்தார்.
பின்னர், தேர்தல் பிரசாரத்தில் பேசிய செந்தில் பாலாஜி, செந்தில் பாலாஜி பிரசாரம் “தமிழகத்தில் கடந்த நான்கு மாதங்களில் எண்ணற்ற பல திட்டங்களை புதிதாக ஏற்றுள்ள அரசு அறிவித்து நடைமுறைப்படுத்தி வருகிறது.
அதில், மகளிருக்கு நகரப் பேருந்துகளில் இலவசப் பயணம் திட்டம் பெண்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக, ஆவின் பால் விற்பனை விலையை குறைத்து அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
கொரோனா காலத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை செலவை அரசே ஏற்றுக்கொண்டது. ஏழை, எளிய மக்கள் பயன்பெற வேண்டும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் ஜூன் மாதம் 3 – ஆம் தேதி குடும்ப அட்டை ஒன்றுக்கு ரூபாய் நான்காயிரம் உதவித்தொகை வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், கடந்த மே 7 – ஆம் தேதி பொறுப்பேற்றதும் முதல் தவணையாக ரூ. 2000, ஜூன் 3 – ஆம் தேதி இரண்டாம் தவணையாக ரூ. 2000 என முன்னதாகவே வழங்கி, பொதுமக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தியுள்ளது.
திமுக ஆட்சியின் 4 மாத சாதனை என்பது 20 ஓவர் கிரிக்கெட் மேட் போல. ஆனால், ஒரு ஓவர் முடிவடைந்த நிலையிலேயே எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. என்று தெரிவித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.