திருச்சி மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு - என்ன காரணம்?
திருச்சி ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
சைவ திருத்தலங்களில் மஹா சிவராத்திரி எப்படி சிறப்பாக கொண்டாடப்படுகிறதோ, அதேபோன்று வைணவ திருத்தலங்களில் வைகுண்ட ஏகாதசி விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது.
வைணவர்களின் 108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுவதுமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா நாளை (டிசம்பர் 14) கொண்டாடப்பட உள்ளது. இதன் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வு அதிகாலை 4:45 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதனையொட்டி திருச்சி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக வரும் 18 ஆம் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக இருக்கும் எனவும் திருச்சி கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.
பகல் பத்து, ராப்பத்து என்று மொத்தம் 21 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் பகல் பத்து முடிந்து, ராப்பத்து தொடங்குவதற்கு முதல்நாள் வைகுண்ட ஏகாதசியாக கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.