ஆகஸ்ட் 3, 5, 7 பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா?
ஆகஸ்ட் 3, 7 தேதிகளில் சில மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தீரன் சின்னமலை
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 3ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் சென்னிமலை அருகிலுள்ள செ. மேலப்பாளையம் என்னும் ஊரில், 1756 அன்று பிறந்தவர் தீரன் சின்னமலை. கொங்கு பகுதியில் ஆங்கிலேயே படைகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார். சூழ்ச்சி மூலம் கைது செய்த ஆங்கிலேய படை1805ஆம் ஆண்டு அவரை தூக்கிலிட்டது. நூற்றாண்டுகள் கடந்த போதும் தமிழக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தீரன் சின்னமலை.
உள்ளூர் விடுமுறை
இந்நிலையில் அவரது நினைவு நாளுக்கு திருப்பூர் மாவட்டத்தில் உள்ளூர் அரசு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் ஆகஸ்ட் 3ஆம் தேதி (சனிக்கிழமை) கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி நினைவாக நடைபெறும் விழாவை முன்னிட்டு நாமக்கல் மாவட்ட நிர்வாகம் அன்றைய தினம் விடுமுறை அறிவித்துள்ளது.
மேலும், சேலம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருவிழாவான கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற உள்ளதால் சேலம் மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 7 ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து சேலம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்ய 31 ம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் 442வது ஆண்டு பனிமயமாதா பேராலய திருவிழா நடைபெற உள்ளதால் ஆகஸ்ட் 5 ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக ஆகஸ்ட் 10 ம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.