உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு; அமைச்சர் தகவல்
உள்ளாட்சி தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வரும் 13ம் தேதி வெளியாகும் என ஊரக தொழிற்துறை அமைச்சர் தாமோ அன்பரசன் தெரிவித்துள்ளார்.
சென்னை பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொழிச்சலூரில் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதியின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் பொழிச்சலூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதனை ஊரக தொழிற்துறை அமைச்சர் தாமோ அன்பரசன் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.அதனை தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், கடந்த 3 மாதங்களாக எதிர்க்கட்சிகளே எதிர்பார்க்காத அளவில் சிறப்பாக பணியாற்றி வருவதாகவும், 13 கோடி மதிப்பில் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா புகைப்படம் பொறிக்கப்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் புத்தக பை வீணாக்காமல் அதே புத்தக பையை வழங்க உத்தரவிட்டவர் நமது முதலமைச்சர் முக.ஸ்டாலின் என புகழாரம் சூட்டினார்.
மேலும் வரும் 13ம் தேதி உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருப்பதாகவும், சட்டமன்ற தேர்தல் போல் உள்ளாட்சி தேர்தலில் அமோக வெற்றி பெறவேண்டும் என கேட்டுக்கொண்டார்.