’’ முடிந்தால் ஆம்பளையா இருந்தா ஒத்தைக்கு ஒத்தை வாங்கடா’’ - மாறி மாறி திட்டிக்கொண்ட அதிமுக, அமமுகவினர்: களவரமான பிரச்சாரக் கூட்டம்
நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தின் போது அமுமுக மற்றும் அதிமுகவினர் தகாத வார்த்தைகளால் திட்டிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் ஊரகத்தில் காலியாகவுள்ள 52 பதவிகளுக்கான தேர்தல் அக்டோபர் 9 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் , கும்பகோணத்தை அடுத்த கொற்கை-மருதாநல்லுார், ஒன்றிய குழு உறுப்பினருக்கான 24 ஆவது வார்டு தேர்தலில் திமுக சார்பில் சசிகுமாரும், அதிமுக சார்பில் சீதாராமனும், அமமுக சார்பில் விஜய ஆனந்தும் போட்டியிடுகின்றனர்.
உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கான வாக்கு சேகரிப்பு முடிவடைந்த நிலையில் திமுக, அதிமுக, அமுமுக மூன்று கட்சியினரும் மாலையில் பரபரப்புடன் வாக்கு சேகரித்தனர்.
இந்த நிலையில், கும்பகோணத்தை அடுத்த கொற்கை கிராமத்தில் அதிமுகவினரும், அமமுகவினரும் ஒரே இடத்தில் இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இதில் அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ ராமநாதன், ஒன்றிய செயலாளர்கள் அறிவழகன், செந்தில், அசோக்குமார், முன்னாள் ஒன்றியசெயலாளர் சின்னையன், அமமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ ரங்கசாமி மற்றும் இரண்டு கட்சிகளை சேர்ந்தவர்கள் கூடினர்.
அப்போது, நேரம் முடிந்ததால், அமமுகவினர், பிரச்சாரத்தை முடித்து கொண்டனர். ஆனால் அதிமுகவினர், பிரச்சாரத்தை முடிக்காமல், பேசி கொண்டிருந்தனர். இதனையறிந்த அமமுகவினர், பாதுகாப்பு பணியிலிருந்த போலீசாரிடம், புகார் அளித்தனர்.
அப்போது, இரண்டு கட்சியினரும் ஒருமையில் தகாத வார்த்தைகளால் பேசிக்கொண்டு இருந்த போது, தள்ளுமுள்ளு ஏற்பட்டு, மோதல் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டது.

இதில் திருவிடைமருதுார் ஒன்றிய செயலாளர் அசோக்குமாரை, அமமுகவினர், கீழே தள்ளி விட்டனர். இதனால் ஆத்திரமடைந்த அசோக்குமார், ’’ஆம்பளையா இருந்தா ஒத்தைக்கு ஒத்தை வாங்கடா’’ என்று பிரச்சார மைக்கில் பேசியதால், அதிமுகவினருக்கும் அமமுகவினரும் மாறி மாறி கொச்சையான வார்த்தைகளால் பேசிக்கொண்டனர்.
சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்த பிரச்சனை காவல்துறையினர் தலையிட்டு சம்மாதன படுத்தியதால் இருவரும் கலைந்து சென்றனர். இதனால் கும்பகோணம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது