ஊரக உள்ளாட்சி தேர்தல்: பரமக்குடியில் வாக்கு பெட்டி உடைப்பு

By Fathima Oct 12, 2021 06:53 AM GMT
Report

தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் தபால் வாக்குப்பெட்டியின் சாவி தொலைந்தது. இதனால் சுத்தியல் மூலம் வாக்குப்பெட்டியின் பூட்டை உடைத்து தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.

பரமக்குடியில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது, வாக்குப் பெட்டியின் சாவி மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து அதிகாரிகளால் சுத்தியல் மூலம் வாக்குப்பெட்டியின் பூட்டு உடைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

மரக்காணம் வாக்கு எண்ணும் மையத்தில் காவல் துறையினருக்கும், முகவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பின் கைகலப்பில் முடிந்தது. இதனால் வாக்கு எண்ணும் பணி சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது.

கரூர் மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றிய வாக்கு எண்ணும் மையத்தில் திமுக மற்றும் அதிமுகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது இதனால், வாக்கு எண்ணிக்கை தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. அங்கே, ஒதுக்கீடு செய்யப்பட்ட மேஜைகளில் அட்டவணை வரிசைப்படி பெட்டிகளை அமைக்கவில்லை என திமுகவினர் குற்றம் சாட்டினர்.

இந்நிலையில், ஏற்கனவே ஒதுக்கப்பட்டது போல் வரிசைப்படி பெட்டிகளை அமைக்க வேண்டும் என அதிமுகவினர் குற்றம் சாட்டினர். இரு தரப்பினரும் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் வாக்கு எண்ணும் பணி தாமதமானது.