நெல்லை மாவட்ட உள்ளாட்சி தேர்தல் நிலவரம்: 9 மணி நிலவரப்படி 9.75% வாக்குகள் பதிவு
திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் முதல்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் காலை 9 மணிநேர நிலவரப்படி 9.75 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களில் 12 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 122 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 204 கிராம ஊராட்சி தலைவர், 1,731 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் என மொத்தம் 2,069 பதவியிடங்களுக்கு நேரடி தேர்தல் நடைபெறுகிறது.
இதில் அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, மானூர், பாளையங்கோட்டை, பாப்பாக்குடி ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களில் முதல்கட்டமாக புதன்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதற்காக 621 வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன, முதல் கட்ட தேர்தலில் 1,69,765 ஆண் வாக்காளர்கள், 1,78,234 பெண் வாக்காளர்கள், 43 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 3,48,042 வாக்காளர்கள் உள்ளனர்.
புதன்கிழமை காலை 6.45 மணி முதலே வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளுக்கு முன்பு குவிய தொடங்கினர்.
காலை 9 மணி நிலவரப்படி அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் 3,526 வாக்குகள் (7.72 சதவிகிதம்) பதிவாகியிருந்தது.
இதேபோல சேரன்மகாதேவியில் 2136 வாக்குகள் (7.57 சதவிகிதம்), மானூரில் 13,723 வாக்குகள் (10.34 சதவிகிதம்), பாளையங்கோட்டையில் 9,230 வாக்குகள் (9.55 சதவிகிதம்), பாப்பாக்குடியில் 5378 (11.88 சதவிகிதம்) என மொத்தம் 33 ஆயிரத்து 993 வாக்குகள் (9.75 சதவிகிதம்) பதிவாகின.