தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு - உற்சாகத்தில் அரசியல் கட்சியினர்
தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களில் மட்டும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. புதிய மாவட்டங்கள் பிரிப்பு,வார்டு வரையறை பணிகள் முடிவடையாதது காரணமாக 9 மாவட்டங்களில் தேர்தல் இதுவரை நடக்கவில்லை.
இதனிடையே விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தமிழக மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வந்தது. அதன்படி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, முகவரி மாற்றம் போன்ற பணிகள் நடைபெற்று கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழகத்தின் 9 மாவட்டங்களுக்கு அக்டோபர் 6 ஆம் தேதி மற்றும் 9 ஆம் தேதி என இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்றும், வேட்புமனு தாக்கல் வரும் 15 ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12 ஆம் தேதியும் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, தென்காசி, ராணிப்பேட்டை, நெல்லை, வேலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், திருப்பத்தூர் ஆகிய மாவட்டத்தைச் சார்ந்த அரசியல் கட்சியினர் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.