கண்ணும் கருத்துமாகச் செயலாற்ற வேண்டும் - திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

elections local-and-municipal CM stalin-letter தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்
By Nandhini Feb 22, 2022 03:26 AM GMT
Report

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சி களுக்கான நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 19ம் தேதி நடைபெற்று முடிந்தது.

மறுவாக்குப்பதிவு 5 வார்டுகளில் 7 வாக்குச்சாவடிகளில் நேற்று நடந்தது. இதைத் தொடர்ந்து பதிவான வாக்குகள் எண்ணும் பணி, 268 வாக்கு எண்ணும் மையங்களில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடந்து வருகிறது.   

இது குறித்து தமிழக முதலமைச்சர் நேற்று இரவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது -

உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறவிருக்கும் நிலையில், நமக்கு வெற்றி உறுதி. இதனால் நமக்கு கடமையும், பொறுப்பும் மிகுதியாகியுள்ளது. இருப்பினும் வெற்றிக் கொண்டாட்டங்களைத் குறைத்துக் கொண்டு, மக்கள் பணிகளை கூடுதலாக செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். பத்தாண்டுகளாகப் பாழாக்கப்பட்ட உள்ளாட்சி ஜனநாயகத்தின் வேர்களுக்கு நீர் வார்த்து தேர்தலை நடத்தி முடித்திருக்கிறோம்.

வாக்கு எண்ணிக்கை மையங்களில் அதிமுக எந்த அளவுக்கும் எல்லை மீறிச் செல்வார்கள்; கழகத்தின் முகவர்கள் கண்ணும் கருத்துமாகச் செயலாற்ற வேண்டும். நாம் அவதூறுகளையும் பொய்களையும் சாதனைகளால் எதிர்கொண்டோம்! நமது வெற்றியைத் தாங்கிக்கொள்ள முடியாதவர்கள் என்னவெல்லாம் செய்வார்கள் என்பதை நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம்.

நாம் அமைதிகாத்து, சட்டப்படி எதிர்கொள்வோம்! மறைமுகத்தேர்தலில் தலைவர், துணைத்தலைவர் பதவிக்கு திமுக தலைமையால் அறிவிக்கப்படுவோருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், தோழமை கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் பதவிகளுக்கும் ஆதரவளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

நாட்டின் கடைக்கோடி மனிதரும், ஜனநாயகத்தின் நிழலில் இளைப்பாற வேண்டும் என்பதே முதலமைச்சரான எனது எண்ணம். மக்களின் நம்பிக்கையை முழுமையாக நிறைவேற்ற வேண்டிய பொறுப்புகள் மிகுந்துள்ளது.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.