வேலூரில் போட்டியின்றி தேர்வான திமுக வேட்பாளர்களுக்கு வெற்றி சான்றிதழ்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சி களுக்கான நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 19ம் தேதி நடைபெற்று முடிந்தது. மறுவாக்குப்பதிவு 5 வார்டுகளில் 7 வாக்குச்சாவடிகளில் நேற்று நடந்தது.
இதைத் தொடர்ந்து பதிவான வாக்குகள் எண்ணும் பணி, 268 வாக்கு எண்ணும் மையங்களில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடந்து வருகிறது.
இந்நிலையில், வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட காட்பாடி ஒன்றாவது மண்டலம் 7 மற்றும் 8-வது வார்டில் திமுக, அதிமுக, பாமக, சுயேட்சைகள் வேட்புமனு தாக்கல் செய்தனர். ஆனால், அதிமுக, பாமக, சுயேட்சை வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டது.
இதனையடுத்து, திமுக சார்பில் போட்டியிட்ட 7-வது வார்டு வேட்பாளர் புஷ்பலதா வன்னிய ராஜா, 8-வது வார்டு திமுக வேட்பாளர் சுனில் குமார் ஆகியோர் ஒரு மனதாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு வெற்றி பெற்றுள்ளனர்.
நேற்று வேலூர் மாநகராட்சி உதவி ஆணையரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான செந்தில் குமரன் போட்டியின்றி தேர்வான திமுக வேட்பாளர் புஷ்பலதா வன்னிய ராஜா மற்றும் சுனில் குமார் ஆகிய இருவருக்கும் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார்.