கழுத்தை நெறித்த கடன் செயலி - பறிப்போன இளைஞர் உயிர்
கடன் செயலி மூலம் கடன் பெற்ற சென்னையைச் சேர்ந்த ஐடி நிறுவன ஊழியர், மன உளைச்சலின் காரணமாக வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இளைஞர் தற்கொலை
சென்னை, கே.கே நகர் பகுதியைச் சேர்ந்தவர் நரேந்திரன். இவர் சென்னையில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.
இவர் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்றிருந்த பெற்றோர் வீடு வந்து பார்த்த போது நரேந்திரன் துாக்கில் சடலமாக தொங்கியதை கண்டு கதறிய பெற்றோர் கே.கே.நகர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் நரேந்திரன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கடன் செயலிகளால் விபரீதம்
இச்சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், நரேந்திரன் ஒரு கடன் செயலி மூலம் ரூ.33,000 கடன் பெற்றுள்ளார்.
கடன் பெற்ற தொகை முழுவதையும் நரேந்திரன் திருப்பி செலுத்தியதாக சொல்லப்படுகிறது. இருந்த போதும் அவர் கடன் பெற்ற செயலி கும்பல் பணத்தை செலுத்த வேண்டும் என்று கூறி அவரை ஆபாசமாக பேசி மிரட்டியுள்ளது.
இதனால் வேறு ஒரு கடன் செயலி மூலம் மேலும் ரூ.50000 ஆயிரம் ரூபாய் பணத்தை கடன் பெற்று இந்த செயலியில் கட்டியுள்ளார். அப்படி இருந்தும் அந்த கும்பல் நரேந்திரனைத் தொடர்ந்து மிரட்டி வந்துள்ளது.
அது மட்டுமின்றி அந்த கடன் செயலி கும்பல் நரேந்திரன் புகைப்படத்தை தவறாக சித்தரித்து அவரது தோழிகள், நண்பர்கள், மற்றும் குடும்பத்தினருக்கு அனுப்பியுள்ளது தெரியவந்துள்ளது.
கடன் செயலிகளால் தொடர் தற்கொலைகள் அரங்கேறி வரும் நிலையில் அரசு கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர் சமூக ஆர்வலர்கள்