உதயநிதி ஒன்றும் கருணாநிதி அல்ல - பாஜக மத்திய அமைச்சர் பாய்ச்சல்..!!
அரசியலில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பக்குவப்பட்ட அரசியல்வாதி போல பேசவேண்டும் என மத்திய இணையமைச்சர் விமர்சித்துள்ளார்.
கோவை பொள்ளாச்சி ரயில்
மத்திய இணையமைச்சர் எல்.முருகன் முன்பதிவு இல்லாத ரயில் சேவையை கோவை - பொள்ளாச்சி இடையே நேற்று கோவை ரயில் நிலையத்திலிருந்து துவங்கி வைத்தார்.
அதனை துவங்கி வைத்து பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த இந்த சேவையை ரயில்வே அமைச்சரிடம் எடுத்து சென்று ஒரே மாதத்தில் ஒப்புதல் பெற்று ரயில் சேவை தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது என பெருமிதம் தெரிவித்தார்.
உதயநிதி கருணாநிதி அல்ல
தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின், அவர்கள் அப்பன் வீட்டு காசை கேட்கவில்லை என கூறிய கருத்திற்கு பதிலளித்து பேசிய எல்.முருகன், “உதயநிதி ஸ்டாலின் ஒன்றும் கருணாநிதி கிடையாது என்று தெரிவித்து, உதயநிதி அந்த அளவுக்கான ஆள் கிடையாது என்றும் ஒரு கத்துக்குட்டியாக உள்ளார் என விமர்சித்தார்.
அரசியலில் உதயநிதி நிறைய கற்றுக்கொள்ள வேண்டி இருக்கிறது என்று குறிப்பிட்ட எல்.முருகன், மத்திய அரசோடு இணைந்து வேலை செய்யும்போது தமிழ்நாடு அரசுக்குதான் பலன் கிடைக்கும் என்றும் அமைச்சருக்கான தரத்தை உதயநிதி ஸ்டாலின் குறைத்துவிட்டார் என்று கூறி பக்குவப்பட்ட தலைவராக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.
மேலும், உதயநிதி குதர்க்கமாக கேலி, கிண்டலாக பேசி அமைச்சருக்கான தராதரத்தை குறைத்துவிட்டார்.” என்றும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.