பாகிஸ்தானில் பிறந்த ரத யாத்திரை நாயகன்..! பாரத ரத்னா அத்வானியின் வாழ்க்கை வரலாறு..!
1990-களில் பாஜகவை அறியாதவர்கள் கூட அத்வானியின் ரதயாத்திரை குறித்து அறிந்திருந்தனர்.
அந்த அளவிற்கு இந்திய அரசியலில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது அத்வானியின் ரதயாத்திரை. காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த இடம் என்பதை தாண்டி காங்கிரஸ் கட்சியின் வீழ்த்த செய்யும் சக்தியாக பாஜக உருவாக மிக பெரிய காரணம் எல்.கே.அத்வானி.
8 நவம்பர் 1927-ஆம் ஆண்டு பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் பிறந்த லால் கிருஷ்ணா அத்வானி, தன்னுடைய 14 வயதில் அதாவது 1941-ம் ஆண்டில் தன்னை பாஜகவின் பின்புலமான ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இணைத்தார்.
1951 ஆம் ஆண்டு, சியாமா பிரசாத் முகர்ஜி நிறுவிய பாரதிய ஜன சங்கத்தில் உறுப்பினரான அத்வானி, நாடாளுமன்ற பொறுப்பு, பொதுச் செயலாளர், டெல்லி பிரிவின் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளையும் வகித்துள்ளார்.
1970-ஆம் ஆண்டில் முதன்முறையாக அத்வானி ராஜ்யசபா உறுப்பினராகி தொடர்ந்து 4 முறை 1989 வரை அப்பதவியை வகித்தார். ஜனசங்கம் 1977 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு, ஜனதா கட்சியில் இணைக்கப்பட்டது. அந்த தேர்தலில் ஜனதா கட்சியின் வெற்றியைத் அடுத்து அத்வானி மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சராகவும், கட்சியின் ராஜ்யசபா அவைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பாஜகவின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவரான அடல் பிஹாரி வாஜ்பாயுடன் இணைத்து 1980 ஆம் ஆண்டிலிருந்து பணியாற்றிய அத்வானி, 1989-இல் பாஜகவின் சார்பாக முதல் முறையாக மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1998 முதல் 2004 வரை உள்துறை அமைச்சராகவும், 2002 முதல் 2004 வரை துணைப் பிரதமராகவும் பதவி வகித்துள்ளார் அத்வானி.
ரத யாத்திரை
1990-களில் அத்வானி இந்திய அரசியலின் மிக முக்கிய நிகழ்வான ராமர் ரத யாத்திரையைத் தொடங்கினார். ராம ஜென்மபூமி இயக்கத்திற்குத் தொண்டர்களைத் திரட்டுவதற்காக தேருடன் ஊர்வலம் நடத்திய அத்வானி, இந்த ஊர்வலம் குஜராத்தில் உள்ள சோம்நாத் நகரில் துவங்கி அயோத்தியில் நிறைவுபெற்றது.
1992 இல், பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் அத்வானியும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் 30 செப்டம்பர் 2020 அன்று சிபிஐயின் சிறப்பு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.
2015 ஆம் ஆண்டில், இந்தியாவின் இரண்டாவது உயரிய குடிமகன் விருதான பத்ம விபூஷண் மற்றும் 2024 ஆம் ஆண்டில், இந்தியாவின் உயரிய குடிமகன் விருதான பாரத ரத்னா அவருக்கு வழங்கப்பட்டது.