இட்லி பார்சலில் இறந்து கிடந்த பல்லி - வாடிக்கையாளர் அதிர்ச்சி
கோயம்புத்தூரில் உள்ள பிரபல விருந்து உணவகத்தில் வாடிக்கையாளர் வாங்கிச்சென்ற பார்சல் இட்லியில் பல்லி இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாநகர பகுதியான சித்தாபுதூர் வி.கே.கே. மேனன் சாலையில் இட்லி விருந்து எனும் உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
இங்கு நேற்றிரவு ஏழுமலை என்பவர் வேலைக்கு சென்று விட்டு இரவு உணவு உண்பதற்காக இட்லி பார்சல் வாங்கிச் சென்றுள்ளார்.
வீட்டுக்குச் சென்று அந்த பார்சலை பிரித்து பார்த்தபோது சாம்பாரில் பல்லி ஒன்று உயிரிழந்த நிலையில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் அந்த பார்சலை எடுத்துக்கொண்டு சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு சென்று ஊழியர்களிடம் காண்பித்து முறையிட்டுள்ளார்.
அப்போது, உணவக உரிமையாளர் இல்லாததால், நீங்கள் சென்றுவிட்டு காலையில் வாருங்கள் என ஊழியர்கள் மெத்தனமாக பதில் அளித்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த ஏழுமலை, மீதமுள்ள சாம்பாரையாவாது யாருக்கும் வழங்காமல் கீழே ஊற்றுங்கள் இல்லையேல் பெரும் விபரீதம் ஏற்படும் என எச்சரித்ததாக கூறப்படுகிறது.
அதற்கும் உணவக ஊழியர்கள் முறையாக பதில் அளிக்காததால் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற ஏழுமலை பல்லி கிடந்த உணவு பார்சலை தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
தற்போது அந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.