சென்னையில் 2000 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது: தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை
சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் எடுத்து வரப்பட்ட 2000 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட தேர்தல் சிறப்பு அதிகாரி பிரகாஷ் தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையரும், சென்னை மாவட்ட தேர்தல் சிறப்பு அதிகாரியுமான பிரகாஷ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாவட்ட வருவாய் அலுவலர்கள், சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால், சென்னை பெருநகர காவல் இணை மற்றும் துணை ஆணையர்கள், தேர்தல் நடத்தும் உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். பணப்பட்டு வாடா, தேர்தல் செலவினங்கள், மதுபான வரத்து குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. சென்னை முழுவதும் 144 பறக்கும் படைகள் நியமிக்கப்பட்டுள்ளது.
பணப்பட்டுவாடாவை தடுக்க சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளிலும் பறக்கும் படை கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அதிகாரிகள் மத்தியில் பேசினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரகாஷ், காவல்துறை ஆணையர், மது விலக்கு ஆய தீர்வை ஆணையர் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
பணப்படுவாடா செய்வதை தடுப்பது, தேர்தல் செலவினங்கள் குறித்து விவாதித்துள்ளோம். சென்னை முழுவதும் உள்ள 16 தொகுதிக்களுக்கு 144 பறக்கும் படைகள் நியமிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகர்களும், வட்டார துணை ஆணையர்களும் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவர். Paid News என்கிற முக்கியமான விஷயம் பற்றி பேசப்பட்டது.
ஊடகத்துறையின் பங்கு முக்கியம். ஊடக விளம்பரங்கள் கண்காணிக்கப்படும். விளம்பரங்களுக்கு எவ்வளவு தொகை செலுத்துகிறார்கள் என்பது கண்காணிக்கப்படும். மதுபான வகைகள் கடத்தி செல்வது, எடுத்து செல்வதும் கண்காணிக்கப்படும். இது குறித்து இன்று டாஸ்மாக் ஆணையரிடம் ஆலோசனை நடத்தினோம். சென்னையில் உள்ள 100% டாஸ்மாக் கடைகளிலும் சிசிடிவி கண்டிப்பாக பொருத்த வேண்டும்.
சென்னையில் காவல்துறையினர் சோதனையில் அனுமதியின்றி, உரிமம் இன்றி எடுத்து வரப்பட்ட 2000 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கருத்துக்கணிப்புகள் paid news பிரிவில் வராது. கருத்துக்கணிப்புகள் வெளியிட இந்திய தேர்தல் ஆணையதால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.